பாலிவுட் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனரான சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக தயாராகியுள்ள திரைப்படம் பதான். ஷாருக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு ’பதான்’ ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் முதல் பாடலான 'பேஷரம் ரங்' பாடல் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
இந்த பாடல் முழுவதும் தீபிகா படுகோன் காவி நிறத்திலான பிகினி உடை அணிந்திருப்பதற்கு வலதுசாரி அமைப்புகள், அரசியல்வாதிகள்,இந்துத்துவ கும்பல் என பலரும் பெரும் கண்டனங்களை எழுப்பினர்; உருவப்படங்களை எரிப்பது, திரையிட கூடாது என மிரட்டல் விடுவதுமாக கலவரம் வெடித்தது.
இந்த சர்ச்சைக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் பிரசூன் ஜோஷி சில மாற்றங்களை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அவரின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் " சிபிஎஃப்சி வழிகாட்டுதல்களின் படி பதான் திரைப்படம் உரிய செயல்முறைகளை கொண்டுள்ளதா என்பதை ஆராய அனுப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களுடன் 'பேஷரம் ரங்' பாடலின் திருத்தப்பட்ட பதிப்பை தியேட்டர் ரிலீசுக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பார்வையாளர்களின் உணர்வோடு சமநிலையில் படைப்பு அமைக்கப்பட்டுள்ளதா என்பதை CBFC கண்டறிந்து அதை உறுதிப்படுத்தும்.
இந்த செயல்முறையில் நமது நம்பிக்கை, கலாச்சாரம் போன்றவற்றால் ஏதாவது சிக்கல் உள்ளதா என்பது கவனமாக பார்க்கப்படும்; பார்வையாளர்கள் மற்றும் படைப்பாளிகள் இருவருக்கும் இடையே உள்ள நம்பிக்கையும் பாதுகாப்பும் மிகவும் முக்கியமாக செயல்படுத்தப்பட வேண்டும்" என்றார்.