பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்றாலே ஹிந்தி திரைப்படங்கள் தான் என ஆதிக்கம் செலுத்தி வந்த வரலாற்றை மாற்றியது எஸ்.எஸ். ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம்.
இந்தி திரைப்படங்களுக்கு இணையாக தென்னிந்திய திரைப்படங்களும் தொழில்நுட்ப ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை செய்ய முடியும் என்பதை நிரூபித்தது தெலுங்கு திரையுலகில் வெளியான பாகுபலி மற்றும் கன்னட திரையுலகில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம். அதனை தொடர்ந்து பான் இந்திய திரைப்படமாக வெளியான புஷ்பா திரைப்படமும் வர்த்தக ரீதியாக அதிகமாக வசூலை பெற்று தென்னிந்திய சினிமாவை சர்வதேச அளவிற்கு எடுத்து சென்றது.
சர்ச்சைகளை சிக்ஸர் அடித்த பதான் :
அந்த வகையில் பாலிவுட் சினிமா கடந்த ஆண்டு தொடர்ந்து சரிவை சந்தித்தது. வசூல் ரீதியாக பெரிய அளவில் பாதிக்கப்பட்ட இந்தி சினிமா தனது முழு நம்பிக்கையையும் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'பதான்' படத்தின் மீது வைத்தது. மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் 50வது தயாரிப்பாக நடிகர் ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடிப்பில் ஜனவரி 25ம் தேதி வெளியான திரைப்படம் 'பதான்'.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியது. படத்தை பாய்காட் செய்யும் அளவிற்கு பலதரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில் படத்தின் வசூலை வெகுவாக பாதிக்கும் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேச்சு எழுந்தது. ஆனால் சர்ச்சைகளை எல்லாம் சிக்ஸர் அடிக்கும் வகையில் முன்பதிவிலேயே பட்டையை கிளப்பியது பதான் படம்.
அதிரடியான முன்பதிவு :
இந்திய அளவில் பதான் படம் 5000 ஸ்க்ரீன்களில் ஜனவரி 25ம் தேதி வெளியானது. முதல் நாள் காட்சிகளுக்கு மட்டுமே 5.21 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு நடைபெற்றது. இதனால் அதிக அளவிலான முன்பதிவு செய்யப்பட்ட முதல் இந்தி படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இதனால் படத்தின் முதல் நாள் வசூல் எப்படி இருக்க போகிறது என மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. ‘கேஜிஎஃப் 2’ படத்தின் முந்தைய சாதனையை முறியடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் பதான் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அற்புதமான ஓப்பனிங் :
2019ம் ஆண்டு வெளியான 'வார்' திரைப்படம் 50 கோடியும், 2022ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் 52 கோடியையும் வசூல் செய்தது. அந்த வகையில் இந்தி பாக்ஸ் ஆபிஸில் 51 கோடி வசூல் செய்ததோடு பதான் திரைப்படம் சர்வதேச அளவில் முதல் நாள் மட்டுமே 100 கோடி வசூல் செய்து ஒரு அற்புதமான ஓப்பனிங் பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. விடுமுறை அல்லாத தினத்தில் வெளியாகி 2017ம் ஆண்டு வெளியான பாகுபலி 2வின் இந்தி வெர்ஷன் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது பதான்.