நடிகர் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் திரைப்படத்தில் 'பொணந்திண்ணி' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் செவ்வாழை ராசு. பல திரைப்படங்களிலும் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். அவருக்கு வயது 70 . தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர் உடல் நல குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில மாதங்களாக அனுமதிக்கப்பட்டு இருந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 


தேனி மாவட்டத்தை சேர்ந்த செவ்வாழை ராசு பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர். மைனா, கந்தசாமி உள்ளிட்ட படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  


தனது சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என தீராத ஆசை கொண்டவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிரமான ரசிகன். அவருடைய படங்களை விரும்பி பார்ப்பாராம். 19 வயதிலேயே திருமணம் நடைபெற்ற பிறகு அதிமுக கட்சியில் ஒரு பிரமுகராக மாறி பின்னர் தேனி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளராக பதவி வகித்துள்ளார். 


அந்த சமயத்தில் கிழக்கு சீமையிலே படத்தில் நடிக்க நடிகர்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். அங்கே ஷூட்டிங் நடைபெற்ற போது இயக்குநர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து தந்து சினிமா ஆசையை பற்றி கூறியுள்ளார். பாரதிராஜாவும் ஸ்க்ரீனிங் டெஸ்ட் செய்வதற்காக வசனம் ஒன்றை பேச சொல்லியுள்ளார். ஒரே டேக்கில் சொல்லிய செவ்வாழையை உடனே செலக்ட் செய்துள்ளார் பாரதிராஜா. உடனே அவரின் உடை, தோற்றம் அனைத்தையும் மாற்றி படத்தில் நடிக்க வைத்து விட்டாராம் பாரதிராஜா. இப்படி தான் செவ்வாழை ராசு சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். 


சுமார் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்றாலும் அவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது பருத்திவீரன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் அடைமொழியால் தான் நடிகர் சரவணனுக்கு பருத்திவீரன் படத்தில் செவ்வாழை என்ற பெயர் கொடுத்தார். செவ்வாழை ராசு தனித்துவமான நடிப்பை காட்டிலும் கணீர் என இருக்கும் குரல் வளம் தான் அவரின் பிளஸ் பாயிண்ட்.  


 



 


நடிகர் செவ்வாழை ராசுவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மருத்துவமனையில் இருந்து அவரது உடல் இன்னும் சிறிது நேரத்தில் அவரின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்திற்கு எடுத்துச்செல்ல பட உள்ளது. அங்கு அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. 


தொடர்ந்து திரையுலகில் அடுத்தடுத்து நேரும் உயிரிழப்புகளால் ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் நடிகர் செவ்வாழை ராசுவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.