தமிழ் சினிமாவில் புது முயற்சிகளை மிகவும் துணிச்சலாக எதிர்கொள்வதில் பெயர் பெற்றவர் நடிகரும் இயக்குநரமான பார்த்திபன். தற்போது அவர் 13 இளம் வயதினரை வைத்து உருவாக்கியுள்ள சாகச  த்ரில்லர் திரைப்படம் 'டீன்ஸ்'. குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய வகையில் குழந்தைகளுக்கான ஒரு படமான இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் 2 படம் ரிலீசான அதே தேதியில் பார்த்திபனின் 'டீன்ஸ்' படமும் களம் இறங்கியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பும் நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்து வருகிறது. 




சமீபத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து இருந்தார் பார்த்திபன். "டீன்ஸ் படத்தில் 13 குழந்தைகளும் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொருத்தரையும் நான் தனித்தனியாக வேறுபடுத்திக் காட்டி இருக்கேன். ஆனால் நான் பண்ணவே இல்லை என விமர்சனத்தில் சொல்வது எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ஒரு உண்மையான கலைஞனின் வாழ்க்கையில் விமர்சனம் என்ற பெயரில் விளையாடுவது போல இருப்பது மனசுக்கு வருத்தமாக இருக்கிறது. இது போல புது முயற்சியை பாராட்ட வேண்டும். இதை நான் கோரிக்கையாகவே கேட்டுக்கொள்கிறேன். 


இந்த படம் இரவில் நிழல், ஒத்தசெருப்பு போல எக்ஸ்பிரிமெண்டல் படம் இல்லை. இந்த படத்துக்கு பின்னால் இருக்கும் சென்டிமென்ட், எமோஷனை புரிந்து கொண்டு இது போன்ற படத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார். 


அப்போது பத்திரிகையாளர் ஒருவர் இந்தியன் 2 படம் ஓடாது என தெரிந்து தான் இந்த படத்தை ரிலீஸ் பண்ணீங்களா? என கேட்டதற்கு முதலில் சிரித்த பார்த்திபன் "இப்போது இந்த கேள்விக்கு நான் சிரித்தால், நக்கலாக சிரித்தார் என செய்தி வரும். எனக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த படம் மட்டுமல்ல என்னுடைய முதல் படத்தையே நான் அபூர்வ சகோதர்கள் படத்தோடு தான் வெளியிட்டேன். அதே போல அஞ்சான் படம் வெளியான அன்று தான் கதை திரைக்கதை வசனம் படத்தை புதுமுகங்களை வைத்து வெளியிட்டேன். மக்கள் நிச்சயம் புது விஷயங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. 


விமர்சனத்துக்கும் படத்துக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் அல்லது இடைவெளி இருக்க கூடாது. இந்தியன் 2 படத்தை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எந்த ஒரு ஹைப் படமாக இருந்தாலும் ஒரு சில நாட்களுக்கு அதற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். அதற்கு பிறகு திரையரங்கில் அந்த படங்கள் கொஞ்சமாக குறைய துவங்கியதும் என்னுடைய படத்துக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கிடைக்கும் என நம்பிக்கை தான். 


தற்போது மக்களோட மனநிலை மிகவும் வேகமாக வெளிவந்து விடுகிறது. இன்ஸ்டாகிராம் , ட்விட்டர் மூலம் படம் பார்த்துவிட்டு நன்றாக இருந்தாலும் சரி நல்லா இல்லாவிட்டாலும் உடனே வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள். ஒரு படம் தேறுமா தேறாதா என்பதை உடனே போட்டு உடைத்துவிடுகிறார்கள். இது பற்றிய உங்களின் கருத்து என்ன என கேட்கப்பட்டது. 


அதற்கு பதில் அளித்த பார்த்திபன் "இந்த வளர்ச்சியை நம்மால் தடுக்க முடியாது. நம்முடைய படம் சபைக்கு திரையரங்குக்கு வந்து விட்டால் அதை நான் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. கழுவி ஊத்தினாலும் கழுவாம ஊத்தினாலும் நான் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தான் இந்த படத்தை ரிலீஸ் செய்தேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த படம் மிகவும் பிடிக்கும்" என பேசி இருந்தார்.