தேர்தலுக்காக யாரும் யாரையும் காயப்படுத்திக் கொள்ள வேண்டாம் என நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆர்.கே.செல்வமணி தலைமையில் புதுவசந்தம் அணியும் பாக்யராஜ் தலைமையில் இமயம் அணியும் மோதுகின்றன. புது வசந்தம் அணியில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைவர் பதவிக்கும், செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமார், பொருளாளர் பதவிக்கு பேரரசு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  


இமயம் அணியில் தலைவர் பதவிக்கு இயக்குனர் பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


தேர்தலை முன்னிட்டு இரு அணியினரும் ஒருவரை ஒருவர் மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாக்கியராஜ் அணியில் போட்டியிரும் நடிகரும் இயக்குருமான பார்த்திபன் வீடியோ ஒன்றை ஷேர செய்துள்ளார். அதில் தனது குருவான இயக்குநர் பாக்கியராஜ்க்கு நன்றி தெரிவித்துள்ள பார்த்திபன், எதிர் அணியில் போட்டியிடும் இயக்குநர் செல்வமணிக்கும் வணக்கம் கூறியுள்ளார். தொடர்ந்து தனது ஸ்டைலில் பேசியுள்ள பார்த்திபன், 27 ஆம் தேதி தேர்தல் முடிந்த பிறகு அனைவரும் பழையபடி நண்பர்களாக பேசவுள்ள நிலையில் தற்போது ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


பாக்யராஜின் இமயம் அணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. அதில் பேசிய பாக்யராஜ், ஆர்கே செல்வமணியை கடுமையாக தாக்கிப் பேசினார். நீ எடுத்த படங்கள் ஓடியதாக சொல்கிறார்கள், உண்மையிலேயே அந்த படங்களை நீதான் எடுத்தாயா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது என்று பேசியிருந்தார்.


இயக்குநர் பாக்யராஜுக்கு பதிலடி கொடுத்து இயக்குநர் ஆர்.கே. செல்வமணி வீடியொ வெளியிட்டார். அதில்,  என்னோட மிகப்பெரிய சொத்தே நேர்மையும், சுயஒழுக்கமும்தான். என்னை சிலர் அநாகரிகமாக, அபாண்டமாக விமர்சனம் பண்ணனும்னு நினைக்கறாங்க. இவர் அதை நாகரிகமா சொல்லியிருக்கார்.


இந்த பதவி என் முப்பாடன் சொத்தோ,  என் பாட்டன் சொத்தோ அல்ல. இது ஒவ்வொரு உறுப்பினருக்கும் உண்டான உரிமையான ஒரு சொத்து. ஒவ்வொரு உறுப்பினரும் தீர்மானிக்க வேண்டிய விஷயம் இது. நான் எப்படி இதை தீர்மானிக்க முடியும்.? எப்படி ஒப்படைக்கறது? அப்படி ஒப்படைச்சா நீங்க கமிஷனர் ஆபீஸ் போகமாட்டீங்கன்னா.. இதான் உங்க கேரக்டரா? நான் ரொம்ப பொறுமையாக சொல்கிறேன். உங்க மேல மரியாதை இருக்கு. 25 வருஷமா நான் இந்த சங்கத்துக்காக என் வாழ்க்கையை ஒப்படைச்சிருக்கிறேன்.


நீங்க ஒரு சிறு துரும்பக்கூட அசைக்காமல் இன்றைக்கு நீங்க குற்றசாட்டு சொல்றீங்க. இதை நான் ஒத்துக்க முடியாது. இதுபோல தவறான குற்றச்சாட்டு சொன்னீங்கன்னா.. உங்களை ஒரு போதும் மன்னிக்கமுடியாது. ஒரு போதும் பொறுத்துக்கொள்ளவும் முடியாது.” என்று கூறினார். இந்நிலையில் தான் தேர்தலுக்காக யாரும் யாரையும் காயப்படுத்திக் கொள்ள வேண்டாம் என நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.