சமுத்திரக்கனி, திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என பல்வேறு சவால்களை மேற்கொண்டு வெற்றிக்கனியை ருசித்தவர். இயக்குனர் கே. பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய சமுத்திரக்கனி, 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைத்தேன் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரது இயக்கத்தில் வெளியான முதல் படத்திற்கே, சிறந்த கதைக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்டு கிடைத்தது.


இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில், நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் வெளியான, 'நாடோடிகள்' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அரசி, இதோ பூபாலன் போன்ற சில சீரியல்களை இயக்கி உள்ளது மட்டும் இன்றி, ஜன்னல், மர்மதேசம் , 7 சி போன்ற சீரியல்களில் நடித்தும் உள்ளார். மேலும் இவர் நடிப்பில் வெளியான அப்பா, சாட்டை போன்ற படங்கள் நடிகர் என்பதை தாண்டி இவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்த விசாரணை படத்திற்காக சமுத்திரக்கனிக்கு தேசிய விருது கிடைத்தது. சமீபத்தில் வினோதய சித்தம், ரைட்டர் திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது, அதில் வினோதய சித்தம் திரைப்படத்தை அவரே எழுதி இயக்கி இருந்தார். அதுமட்டுமின்றி தற்போது ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து முடித்துள்ளார், ஆனால் படம் வெளியாகும் முன்பே பல தெலுங்கு படங்களில் கமிட் ஆகி விட்டார். 



சமீபத்தில் ஒரு பட விழாவில் அவர் பேசும்போது, அவர் சென்னைக்கு வந்த கதையை கூறினார், "சினிமா கனவோடு சென்னை வந்த எனக்கு, சென்னையில் ஒருவரை கூட தெரியாது. ஆனால் கிளம்பி வந்துவிட்டேன். எங்கு இறங்க வேண்டும் என்றும் தெரியாது. கண்டக்டர் ஒரு இடம் சொல்லுகிறார், எல்ஐசி என்கிறார். அங்கேயே இறங்கிக்கொண்டேன். அப்போது சினிமாவில் நடிக்க தி.நகர் செல்ல வேண்டும். எப்படி போவதென்று கேட்டேன், இனிமேல் போக முடியாது, மணி 10 மக்கு மேல் ஆகிடுச்சு, நடந்துதான் போகணும் என்றார்கள். நானும் நடந்தேன், நடந்து போற வழில அண்ணா மேம்பாலத்துல ஒரு 5,6 பேர் படுத்திருந்தாங்க, எனக்கும் ரொம்ப அசதி, நான் வச்சிருந்த நியூஸ் பேப்பர விரித்து படுத்துட்டேன். ஒரு போலீஸ் வந்து தட்டினார். எழுந்திரு என்றார், என்னை பற்றி கேட்டார் சொன்னேன், இங்கு படுக்க கூடாது, என்னோடு வா என்றார். அவர் மௌண்ட் ரோட் போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்து சென்று, அவர் சேர் பக்கத்தில் இடம் கொடுத்தார். அதே நியூஸ்பேப்பரை விரித்து படுத்துக்கொண்டேன். காலை ஆனதும், நல்ல பையனா இருக்க, ஊருக்கு போ, போய் படி என்றார். இல்ல நான் தி.நகர் போகணும், பஸ் நம்பர் மட்டும் சொல்லுங்க என்றேன். என் தலையில் கை வைத்து சொன்னார், நீ வந்துருவடா, போ… 17 ஆம் நம்பர் பஸ்… போ என்றார். இன்று வரை அந்த போலீஸ்கரரை தேடிக்கொண்டிருக்கிறேன். அந்த ஸ்டேஷனுக்கு கூட சென்று சொல்லிவிட்டு வந்தேன், ஆனால் அவர் இந்தமாதிரி 100 பேருக்கு உதவி பண்ணிருப்பாரு, உங்களை தெரியுமான்னு தெரியல என்றுவிட்டார்கள்." எனப் பேசினார்.



மேலும் பேசிய அவர், "அதன்பிறகுதான் நிறைய முயற்சித்து பாலச்சந்தர் சாரிடம் இருந்து, பின்னர் இயக்குனர் ஆனேன். உன்னை சரசடைந்தேன்னு ஒரு படம் பண்ணேன், இந்த படம் இன்னும் 10 வருஷம் கழிச்சு வந்துருக்கணும்னு சொன்னாங்க. நல்ல விமர்சனங்கள் ஆனா சரியா ஓடல. அப்புறம் விஜயகாந்த் சாரை வைத்து படம் பண்ணேன், அதுவும் ஓடல. அப்போ நம்மகிட்டதான் பிரச்சனையான்னு, பருத்திவீரன் படத்துல போய் வேலை செஞ்சேன். டேய் ரெண்டு படம் பண்ணிட்டு ஏன்டா இந்த வேலை உனக்குன்னு அமீர் கேட்டார், பண்ணி ரெண்டும் ஓடலயேன்னு சொன்னேன். அந்த படத்துல வேலை செஞ்சிட்டு அப்புறம் வந்து எடுத்த படம்தான் நாடோடிகள். நம்ம தலைக்கணத்தை இறக்கி வச்சிட்டு இறங்கி வந்தோம்ன்னா வாழ்க்கை நம்மல தூக்கி விட்டுடும்." என்று பேசினார்.