Raghav Chadha Net Worth: பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா - ஆம் ஆத்மி எம்.பி. ராகவ்சட்டா இருவருக்கும் நேற்று பிரம்மாண்டமாக நிச்சயம் நடைபெற்றது.


பரினீதி - ராகவ் சட்டா காதல்


பாலிவுட்டின் பிரபல நடிகையும் ப்ரியங்கா சோப்ராவின் அத்தை பெண்ணுமான பரினீதி சோப்ராவும், ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சட்டாவும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இருவரும் தொடர்ந்து பல பொது இடங்களில் ஒன்றாக வலம் வரத் தொடங்கிய நிலையில், இவர்கள் இருவருமே தங்களைப் பற்றிய கிசுகிசுக்களுக்கு மௌனம் சாதித்து வந்தனர்.


மேலும் இவர்கள் இருவரும் லண்டன் எகானமிஸ் ஸ்கூலில் ஒன்றாகப் படித்ததாகவும், நீண்ட கால நண்பர்களான இருவரும் சமீபகாலமாக டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் சமீபத்தில் இருவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டு இவர்கள் இருவருக்கும் நேற்று நிச்சயம் நடைபெற்றது.


நிச்சயதார்த்தம்


டெல்லியில் உள்ள கபுர்தலா இல்லத்தில் பரினீதி, ராகவ் சட்டா ஆகிய இருவருக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த மோதிரத்தை இருவரும் மாற்றிக் கொண்டனர். மணமகனும், மணமகளும் வெள்ளை ஆடை அணிந்து வலம் வந்தனர்.  மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 150 பேர் கலந்து கொண்டனர்.  இந்த விழாவில் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என நெருக்கமானவர்கள் கலந்து கொண்டனர்.


அதன்படி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் மராட்டிய அமைச்சர் ஆதித்ய தாக்கரே மற்றும் பிற கட்சி தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், திரை பிரபலங்களான பிரியங்கா சோப்ரா, கரண் ஜோகர், சானியா மிர்சா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 


பிரபலங்கள் வாழ்த்து


இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இணையத்தில் இருவர்களின் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தார். அதன்படி, ”மணமுடிக்க உள்ள  பரினீதி, ராகவ் சட்டாவுக்கு வாழ்த்துகள் எனவும் உங்களின் திருமணத்திற்காக காத்திருக்க முடியவில்லை. உங்களை இருவரையும் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி. உங்களுடன், தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை கழித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது" என்று பதிவிட்டிருந்தார். 






அதேபோன்று, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பரினீதி சோப்ரா-ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சட்டா நிச்சயதார்த்தத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.