பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை ரிஹானா பேகம் மீது முன்னதாக ராஜ் கண்ணன் என்பவர் திருமண மோசடி புகார் அளித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த ரிஹானா, அவர் எனது தோழியின் கணவராகத்தான் எனக்கு தெரியும். அவருக்கு ஒரு வளர்ப்பு மகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், தொழிலதிபரான ராஜ் கண்ணன் தன்னிடம் இருந்து 15 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு ஏமாற்றுவதாக குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் குறைதீர் முகாமில் புகார்
சென்னை ஆவடி காவல் ஆணையகரத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில் ரிஹானா பேகம் பங்கேற்று, கூடுதல் ஆணையர் பவானீஸ்வரியிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவை பெற்ற கூடுதல் ஆணையர் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து, ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். பின்னர் அடுத்த மக்கள் குறைதீர் முகாமிற்குள் விசாரணை நடந்து முடிவு எட்டப்படும் என உத்தரவிட்டார்.
ரூ.15 லட்சம் கொடுத்து ஏமாந்தேன்
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகை ரிஹானா பேகம், பூந்தமல்லி போலீசார் ஒருதலைபட்டசமாக செயல்படுகின்றனர். ஒரு கட்டத்தில் ரெஸ்ட்ரோ பார் தொடங்கப் போவதாக தன்னிடம் அவர் பணம் கேட்டதும், சிறு வயது முதல் கஷ்டப்பட்டு உழைத்த சேகரித்த எனது ரூ.15 லட்சத்தை அவருக்கு கொடுத்தேன். இந்த பணத்தை திருப்பிக் கேட்டதால் தான், காவல் நிலையத்தில் புகார் அளித்து தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக வேதனை தெரிவித்துள்ளார். ராஜ் கண்ணன் என்பது அவரது உண்மையான பெயர் இல்லை. அழகர் சாமி தான் அவரது இயற்பெயர் என்ற உண்மையை போட்டுடைத்தார்.
கணவரை பிரிந்து வாழும் பெண்கள் மீது காதல் வலை
மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ரிஹானா, அழகர்சாமியின் பெயரில் பல போலீஸ் ஸ்டேஷனில் புகார் இருப்பதால், பெயர், அடையாளத்தை மாற்றி பல பெண்களை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழும் பெண்களை டார்கெட் செய்து ஏமாற்றுவதையே ராஜ் கண்ணன் வேலையாக வைத்திருக்கிறார். பின்னர் அவர்கள் மீது மாய வலை வீசி, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, உடல் ரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும் பயன்படுத்திக் கொள்வதாகவும் ரிஹானா குற்றம்சாட்டியுள்ளார். தற்போது என் மீது அதே பழிதான் விழுந்திருக்கிறது. நான் போராடி வருகிறேன். அதுதொடர்பான ஆடியோக்களையும், போட்டோக்களையும் காண்பித்து நடிகை ரிஹானா கண்ணீர் வடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.