மாமன்னன் படத்தில் யாரும் எதிர்பார்த்திராத கதாப்பாத்திரம் ஏற்று அனைவரையும் புருவம் உயர வைத்தவர் வடிவேலு. காமெடி மட்டும் அல்ல, எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அசால்டாக செய்துவிடுவேன் என்பது போலவே அவரது நடிப்பும் இருந்தது. இதைத்தொடர்ந்து காமெடியனாக பல படங்கள் நடித்தாலும் பெரிய அளவில் கம்பேக் இல்லை என்றே பேசப்பட்டது. சமீபத்தில் வெளியான கேங்கர்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்நிலையில், நடிகர் வடிவேலு, ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மாரீசன் திரைப்படத்தை பார்த்த சினிமா விமர்சகர்கள் நல்லவிதமாகவே பாராட்டியுள்ளனர்.
கதையை திரும்ப திரும்ப கேட்டேன்
மெய்யழகனை போன்ற படமாக இருப்பதாகவும் பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் ஃபகத் பாசில் மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவரும் என்றும் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த வடிவேலு இப்படம் உருவான விதம் குறித்து சுவாரஸ்யங்களோடு தெரிவித்திருக்கிறார். அதில், இயக்குநர் சுதீஷ் சங்கர் இப்படத்தின் கதையை கூறும்போது எனக்கு ஆரம்பத்ததில் சுத்தமாக புரியலை. திரும்ப திரும்ப கதையை கேட்டேன். கதாப்பாத்திரங்களோட பெயர்களை ஞாபகப்படுத்திக் கொள்ள திரும்பவும் கதை சொல்ல சொல்லி பாடு படுத்திட்டேன். ஆனால், அவர் முகம் சுழிக்காம என்கிட்ட கதையை சொன்னாரு.
ஹீரோ யாருன்னே சொல்லலை
எனக்கு இந்த படத்தோட கதையும் ரொம்ப பிடித்திருந்தது. அப்புறம் இந்த படத்தில் யார் அந்த நடிகர் என்று சுதீஷ்கிட்ட கேட்டேன். அவர், சார் 2 நாள் கழித்து உங்களுக்கு சர்ப்ரைஸான அறிவிப்போடு சொல்றேன் சொன்னதும், நான் ஏன்பா இப்பவே எனக்கு சர்ப்ரைஸ் மாதிரிதான் இருக்கு பரவாலை சொல்லு என்றேன். அவர் சொல்லவே இல்லை. அப்புறம் படம் குறித்த அறிவிப்பு வரும்போதுதான் தெரியுது நம்ம ஃபகத் பாசில்னு, எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மாமன்னன் கூட்டணி அப்படியே இதிலும் தொடரும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன் என வடிவேலு தெரிவித்தார்.
ஃபகத் பாசிலை பாராட்டிய வடிவேலு
மேலும் பேசிய நடிகர் வடிவேலு, மாரீசன் படத்தில் நடிக்கும் போது ஃபகத் பாசில் சார் வந்து என்னிடம் ரொம்ப உரிமை எடுத்து பேசுவாரு. சார் நான் 12ஆம் வகுப்பு படித்ததில் இருந்தே உங்க படங்களை பார்ப்பேன். எங்க அப்பா உங்க படத்தை காண்பித்து, பாருடா வடிவேல் எப்படி காமெடியில் கலக்குறாரு என்று சொல்வாரு. இதை கேட்டு எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. மாரீசன் படத்தில் நான் ஹீரோவா, ஃபகத் ஹீரோவான்னு தெரியாது, 2 பேரும் நல்லா நடித்திருக்கிறோம். மக்கள் பார்த்துதான் முடிவு செய்யணும் என தெரிவித்தார்.
பிறகு பேசிய அவர், மாரீசன் படம் பார்க்கும் போது எனக்கு மலையாள படம் பார்த்த மாதிரியே இருந்தது. அந்த கதையின் போக்கு, லொகேஷன் எல்லாமே அதே பீல் தான் இருக்கும். மலையாள படத்தில் வடிவேலு இருந்தது பாேல் உணர்ந்தேன். ஆனால், தமிழ் படம் என்று வடிவேலு கூறியுள்ளார்.