அந்த காலம் முதல் இந்த காலம் வரை குடும்பத்தை மையமாக வைத்து பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளன என்றாலும் குடும்ப கதை என்றவுடன் நம் நினைவுகளில் உடனே வருவது "பாண்டவர் பூமி" குடும்பம் தான். அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இயக்குனர் சேரன் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றோடு 21 ஆண்டுகளை கடந்து விட்டன. காலத்தால் அழியாத இந்த படைப்பு ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. 


 


சேரனின் 5 வது படம்:


 


இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான ஐந்தாவது திரைப்படம் "பாண்டவர் பூமி". அவரின் திரை வாழ்விற்கும் படத்தின் பெயருக்கும் என்ன ஒரு பொருத்தம். 5 வது படம் என்பதால் 'பாண்டவர் பூமி'. ராஜ்கிரண், அருண் விஜய், ரஞ்சித், ஷமிதா, விஜயகுமார், சார்லி, மனோரமா, வினுசக்கரவர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். அண்ணன் - தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக உருவான மற்றுமொரு திரைப்படம் இது. 


 




உறவுக்கு எடுத்துக்காட்டு:


 


அண்ணன்- தம்பி, அக்கா - தங்கை என ஒரு பெரிய குடும்பமாக கிராமத்தில் வாழ்ந்து வரும் குடும்பத்தின் பூர்வீக வீட்டை கட்ட என்ஜினீயராக அருண் விஜய் வருகிறார். அவரின் ஆர்வம், நட்பு, காதல், பிரிவு என அனைத்து உணர்வுகளையும் மிகவும் நேர்த்தியாக வெளிக்காட்டி இருந்தார் நடிகர் அருண் விஜய்


இப்படத்தில் ராஜ்கிரணின் கடைக்குட்டி தங்கையாகவும், கவிதாவின் மகளாகவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் ஷமிதா. ராஜ்கிரண், ரஞ்சித், கவிதா, விஜயகுமார் என அனைவரின் நடிப்பும் அபாரம். அவரவரின் கதாபாத்திரங்களை வெகு சிறப்பாக கையாண்டுள்ளனர். குடும்ப பாசம் , காதல், அன்பு என படம் முழுக்க செண்டிமெண்ட் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை.


 


சிறந்தவர்கள் சிறப்பான படைப்பு:


 


தங்கர் பச்சனின் ஒளிப்பதிவில் காட்சிகள் மனதில் நிலைத்து நிற்கின்றன. படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது பரத்வாஜின் இசை மற்றும் சிநேகன் பாடல் வரிகள். குறிப்பாக தோழா தோழா... பாடல் காதுகளை குளிர வைப்பது போல் அவரவர் வாழ்க்கையில்... பாடல் கண்களை வேர்க்க வைக்கிறது என்றால் அது மிகையல்ல.



மக்களின் வாழ்க்கையை படமாக்கும் இயக்குனர்:


  
தனது சினிமா பயணத்தை வியாபார ரீதியாக மட்டுமே பார்க்காமல் சமூக  அக்கறையோடு மக்களுக்கு ஒரு வாழ்க்கை படமாக அமைப்பதில் இயக்குனர் சேரன் ஒரு தனி ரகம். அதற்கு எடுத்துக்காட்டாக அவரின் இயக்கத்தில் வெளியான பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து மற்றும் பல திரைப்படங்கள் அவரின் அடையாளங்களை பதித்த முத்திரைகள் என்றே சொல்லலாம் . சிறந்த இயக்குநருக்கான "பாண்டவர் பூமி" திரைப்படம் 2001 ம் ஆண்டிற்கான பிலிம் ஃபேர் விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.