2022 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவில் நடத்தப்படும் ஏசியன் அகாடமி கிரியேட்டிவ் விருதுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பஞ்சாயத் சீசன் 2 வெப்சீரிஸிற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.






சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற பட்டியலில் ஜித்தேந்ரகுமாருக்கும், சிறந்த நகைச்சுவை நிகழ்ச்சி என்ற பட்டியலில் பஞ்சாயத் சீசன் 2 வெப்சீரிஸிற்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைமில் வெளியிடப்பட்ட இந்த தொடர் பல விருதுகளை இதுவரை பெற்றிருக்கும் நிலையில், ஏசியன் விருதுகளைப் பெற்ற புகழையும் தற்போது கைப்பற்றியுள்ளது. 






ஹிந்தியில் வெளியான நகைச்சுவை வெப் சீரிஸ் பஞ்சாயத். தி வைரல் ஃபீவர் தயாரிப்பில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்ட இந்த தொடர் மிகவும் பிரபலமானது. இதற்கு சந்தன் குமார் கதை எழுதியுள்ளார். தீபக் குமார் மிஸ்ரா இத்தொடரை இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸில் ஜித்தேந்திர குமார், ஷன்விகா, ரகுபீர் யாதவ், நீனா குப்தா, சந்தன் ராய், துர்கேஷ் குமார் எனப் பலரும் நடித்துள்ளனர். ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி நல்ல வேலை கிடைக்காமல் பஞ்சாயத்து செயலாளராக பணிபுரிய நேரும் தருணத்தில், அவன் வாழ்வில் என்னெல்லாம் நடக்கிறது என்பதே இத்தொடரின் கரு. பஞ்சாயத் முதல் சீசன் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் நாள் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பானது. அந்த ஆண்டிற்கான பிலிம்பார் விருதுகளில் சிறந்த நடிகை என்ற பட்டியலைத் தவிர, அனைத்து பட்டியல்களிலும் இந்த தொடர் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






இத்தொடரின் இரண்டாம் சீசன் மே மாதம் 18 ஆம் நாள் 2022 ஆண்டு ஒளிபரப்பானது. இந்த சீசனில் கதாநாயகன் அபிஷேக் அரசியலில் நாட்டம் கொண்டவராகவும், கிராம முன்னேற்றத்திற்காக உழைப்பவராகவும். அதேசமயம் கேட் தேர்வுக்காக தன்னைத் தயார் படுத்திக் கொள்பவராகவும் காட்டப்படுவார். இதனைத் தொடர்ந்து இத்தொடரின் மூன்றாம் சீசனும் உருவாக இருக்கிறது.