750 க்கும் மேற்பட்ட கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில்  நடித்த பழம்பெரும் நடிகர் கைகலா சத்யநாராயணா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 


 



 


87 வயதான வில்லன் நடிகர் நீண்ட நாட்களாக வயது முதுமை காரணமாக நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனது ஜூப்லி ஹில்ஸ் இல்லத்தில் இன்று காலை காலமானார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவரது இறுதி சடங்குகள் நாளை ஹைதராபாத்தில் உள்ள மகாபிரஸ்தானத்தில் நடைபெற உள்ளது. 1935ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தவர்; சினிமா மீது இருந்த மோகத்தால் சிறிய வயதிலேயே நடிப்பில் இறங்கியவர் பல திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் புராண கதைகளில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். 


 






 


அரசியல் பிரவேசம் :


பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான 'பெரியார்' திரைப்படத்தில் வெங்கடப்ப நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கைகாலா சத்யநாராயணா. இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு இருந்தார். 1996 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மச்சிலிப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


 






 


சின்ன கல்லு பெத்த லாபம்: 


தமிழ் சினிமாவில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் - சிம்ரன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான பஞ்சதந்திரம் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.


'சின்ன கல்லு பெத்த லாபம்' என்ற வசனத்தை பேசும் சஞ்சீவ் ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்தவர் கைகலா சத்தியநாராயணா. இவரின் மறைவு திரையுலகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இவரின் மறைவிற்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.