பிரபல இயக்குநரான பா.ரஞ்சித் கமல்ஹாசனுடன் இணையும் படம் குறித்து சில சுவாரசியமான தகவல்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
‘விக்ரம்’ பட இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த இயக்குநர் பா.ரஞ்சித் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவதை உறுதி செய்ததோடு, கமல்ஹாசனை வைத்து மதுரை பின்னணி கொண்ட கதையை இயக்க ஆசை என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த பா.ரஞ்சித் அதனை மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கிறார். ஆனால் அந்தக்கதைக்கான பேசிக் ஐடியா மட்டுமே அவரிடம் இருக்கிறதாம். அந்தக்கதையை முழுமையாக முடித்து, அதற்கான ஸ்கீரின் ப்ளேயையும் எழுதி முடித்த பின்னர், அதை கமல்ஹாசனிடம் சொல்லி கருத்து கேட்க இருக்கிறாராம்.
கடந்த ஞாயிறு ( ஜூலை 16) அன்று பா.ரஞ்சித், விக்ரம் இணையும் படத்திற்கான பூஜை சென்னையில் நடந்தது. 19 ஆம் நூற்றாண்டில் கே.ஜி.எஃப் -ல் நடந்த கதையை மையப்படுத்தி, இந்தப்படத்தை எடுக்க இருப்பதாக பா.ரஞ்சித் தெரிவித்து இருந்தார். முன்னதாக பா.ரஞ்சித்தின் படங்களுக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வந்த நிலையில், இந்தப்படத்தில் முதன்முறையாக ஜிவி பிரகாஷ் குமாருடன் இணைந்து இருக்கிறார்.
சுதந்திரத்திற்கு முன்னதாக நடைபெறும் இந்தப்படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்க இருக்கிறார் அந்தப்படத்தின் தயாரிப்பாளரான கே.இ.ஞானவேல் ராஜா. இதில் இன்னொரு தகவல் என்ன என்றால் இந்தப்படம் 3டியிலும் எடுக்கப்பட இருக்கிறாதாம். விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது கமல்ஹாசன் மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.