தெலங்கானாவில் பெய்யும் கனமழைக்குப் பின்னணியில் வெளிநாட்டு சதி இருக்கலாம் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.


தெலங்கானா மாநிலத்தில் பருவமழை அதிதீவிரமாகப் பொழிந்து வருகிறது. அங்கு பெய்யும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பத்ராத்ரி கோதகுடம் மாவட்டங்களில் சுமார் 110 கிராமங்கள் சிக்கியுள்ளன. குறிப்பாக, கோதாவரி ஆற்றை ஒட்டியுள்ள பத்ராசலம் நகரில் வசிப்பவர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். அவர்களில் சுமார் 5000 பேர் இதுவரை அவ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தபப்ட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் கனமழை காரணமாக லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.






இதனையடுத்து தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கோதகுடம் மாவட்டத்தில்  அமைச்சர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம் உரையாடிய கேசிஆர், தங்கள் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டவர்களுக்கு உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.






அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய கேசிஆர், தெலங்கானாவில் பெய்யும் கனமழைக்கு வெளிநாட்டு சதி காரணமாக இருக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாக கூறியுள்ளார். “மேகவெடிப்பு என்ற அதிசய சம்பவம் ஒன்று இருக்கிறது. அது எவ்வளவு உண்மை என்று தெரியாது. ஆனால், சில நாடுகள் வேண்டுமென்றே மேகவெடிப்புகளை இந்தியாவின் சில மாநிலங்களில் தூண்டுகிறார்கள். இது தொடர்பாக சதித்திட்டங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். இதற்கு முன்பு லே-லடாக், பின்னர் உத்தரகாண்ட்டில் செய்ததையே தற்போது கோதாவரி ஆற்றுப்பிடிப்புப் பகுதிகளில் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.


நிர்மல் மாவட்டத்தில் உள்ள காடெம் நீர்பிடிப்புப் பகுதியில் அதன் அதிகபட்சக் கொள்ளளவைத் தாண்டியும், எந்த சேதாரமும் இருக்கிறது. இதன் அதிகபட்ச கொள்ளளவே 2.90 லட்சம் கனஅடி நீர் தான். ஆனால் இந்த முறை இது 5 லட்சம் கன அடியை எட்டிவிட்டது. இன்னும் அது நிற்பது ஒரு அதிசயம் தான். நல்லவேளையாக இந்த வெள்ளத்தில் யாரும் உயிரிழக்கவில்லை” என்று கேசிஆர் பேசியுள்ளார்.






பத்ராசலம் நகரப் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்ய முதலமைச்சர் திட்டமிட்டிருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக கைவிடப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, வெள்ளம் பாதிக்கப்படாத வகையில் உயரமான இடத்தில் வீடு கட்டுவதற்காக சுமார் 1000 கோடி மதிப்பில் திட்டத்தை தயாரிக்க கோதகுடம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.




மேலும், சேதமடைந்துள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று கூறியுள்ள அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நிலைமை சரியாகும் வரை முகாம்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் மேலும் 15 நாள்களுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.