மாஜாவின் தனியிசை பாடல்களான என்ஜாய் எஞ்சாமி மற்றும் நீயே ஒளி பாடல்கள் வைரலானதை அடுத்து ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கை கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதன் அட்டைப்படத்தில் தீயும், SVDP யும் இடம்பெற்றுள்ளனர். இரு பாடல்களுக்கும் முக்கிய பங்காற்றிய அறிவு இடம்பெறாதது குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் ட்விட்டரில் மாஜாவிடமும் ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கையிடமும் கேள்வி எழுப்பினார். இது பாடல் பேசும் அரசியலை அழிக்கும் செயலென்று குறிப்பிட்டுள்ளார்.


தனியிசை கலையையும் கலை வடிவத்தையும் இந்தியாவில் வலுவாக்குவதற்காக தொடங்கிய மாஜா என்னும் புதிய தளம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானால் உருவாக்கப்பட்டது. அது தொடங்கியபோதே இந்தியாவின் தலைசிறந்த இசையை உலகம் கேட்காமலேயே இருக்கிறது, அதை கேட்கவைப்பது தான் இதன் ஒரே நோக்கம், என்று கூறி வரும் காலங்களில் நிறைய தனியிசை கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டு பல பாடல்கள் உலக அரங்கிற்கு எடுத்துச்செல்லப்படும் என்று கூறியிருந்தார்.



தனியிசை கலைஞர்கள் மற்றும் அதன் இசை வடிவத்தை பெரிதும் ஆதரித்துவரும் சந்தோஷ் நாராயணன் அதில் முதல் பாடலாக அறிவு எழுதி தீயுடன் இணைந்து பாடிய 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை வெளியிட்டு தொடங்கி வைத்தார். பாடல் பட்டி தொட்டியெங்கும் வைரல் அடிக்க, அறிவு என்னும் கலைஞர் மகத்தான அங்கீகாரம் பெற்றார். அத்துடன் தீயின் குரலுக்கு பலர் மயங்கிப்போய் என்ஜாய் எஞ்சாமி ஃபீவரில் சுற்றிக்கொண்டிருந்தனர். அந்த பாடலில் பயன்படுத்த பட்ட ஒலி அமைப்பு, இசை கருவிகள், அறிவின் வித்தியாச குரல் வேறுபாடுகள் பாடலை ஆழமாக கவனிக்க செய்தது. அதிலும் முக்கியமாக பாடல் பேசிய அரசியல் மொழிகள் கடந்து அனைவரையும் சிந்திக்க செய்தது. குறிப்பாக கேரளாவில் இருந்து பல ரசிகர்கள் அறிவு குறித்தும் சந்தோஷ் நாராயணன் குறித்தும் உரையாட துவங்கினர். முப்பது கோடி பார்வையாளர்களை கடந்து பாடல் இன்னும் பலரது காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது.



அதை தொடர்ந்து சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இடம்பெற்ற 'நீயே ஒளி' பாடல் மாஜாவில் வெளியிடப்பட்டது. அந்த பாடலில் கனடாவை சேர்ந்த SVDP என்று அழைக்கப்படும் ஷான் வின்சென்ட் டி பால் செய்திருந்த ரேப் பகுதி வெகுவாக பாராட்ட பெற்றது. சார்பட்டா திரைப்படத்தில் பாடல் இடம்பெறும் இடமும் பலரால் ரசிக்கப்பட்டது.


இந்த இரு பாடல்களில் பாடியிருந்த தீ மற்றும் SVDP புகைப்படம் இடம்பெற்ற அட்டைப்படம் ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கையின் முகப்பில் வந்திருந்தது. இந்த இரு பாடல்களும் ஹிட் ஆவதற்கு மூல காரணம் அறிவு எழுதிய அழுத்தம் நிறைந்த பாடல் வரிகள் மற்றும் அவர் என்ஜாய் என்ஜாமியின் முக்கிய பாடகரும் கூட. ஆனால் அவர் புகைப்படமோ பெயரோ கூட இடம்பெறாமல் அதன் முகப்பு இருப்பதை இயக்குனர் பா.ரஞ்சித் விமர்சித்துள்ளார். ட்விட்டரில் மாஜாவையும் ரோலிங் ஸ்டோனையும் டேக் செய்து கேள்வி எழுப்பிய ரஞ்சித் அறிவு மீண்டும் ஒரு முறை இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது பாடல் பேசும் அரசியலை அழிக்கும் செயலென்று புரிந்துகொள்வது அவ்வளவு கடினமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இணையவாசிகள் பலரும் அறிவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். எஞ்ஜாமி பாடலின் இதயமே அறிவு தான் என்றும், அவர் இல்லாமல் அந்த பாடலுக்கு உயிர் இல்லை என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்