Pa Ranjith: ”நான் அடையாள அரசியல் செய்வதாகவும், என்னுடைய ஆளுங்க கூட மட்டும் தான் வேலை பார்ப்பேன் என்றும் சிலர் பேசுகின்றனர்” என இயக்குநரும் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் பேசியுள்ளார். 

 

கடந்த 25ஆம் தேதி சாந்தனு, அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளிவந்த ப்ளூ ஸ்டார் படம் ரிலீசானது. படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சென்னையில் ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற பா. ரஞ்சித், “என்னை வெறும் ரஞ்சித்தா பார்க்கமாட்டாங்க. நான் பேசற அரசியலை வச்சி தான் என்னை பார்ப்பாங்க. நான் என்னுடைய ஆளுங்க கூட மட்டும் தான் வேலை பார்ப்பேன்னு சொல்வாங்க. நான் அடையாள அரசியல் பண்றேன்னு சொல்வாங்க. ஆனால், அதையெல்லாம் நான் நம்பறது இல்லை. எனக்கு என்ன பிடிச்சு இருக்கோ, எனக்கு என்ன தேவையோ அதை தான் நான் செய்றேன். 

 

என்னுடைய உழைப்பத்தான் நான் நம்பறேன். நான் பேசற அரசியலை நான் முழுசா நம்பறேன். என்னுடைய அரசியல் தான் நான். நான் பேசற அரசியல் பலரை என்னிடம் அழைத்து வந்துள்ளது. என்னை நம்புறவங்க, என்னை ஏற்றுக் கொள்பவர்கள் தான் என்னுடன் பணியாற்ற முடியும். அந்த அரசியலையும், அந்த தத்துவத்தையும் புரிந்தவர்கள் மட்டுமே இந்த படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். 

 

உங்க கோவில், எங்க கோயில், உங்க சாமி எங்க சாமி என பொதுவாக இருப்பதை கூறும் ஒரு படம் தான் ப்ளூ ஸ்டார். சக வயது உள்ள ஒருவன் தனது அம்மாவை மரியாதை இல்லாமல் அழைக்கும் கோபத்தின் வலி கொடூரமானது. அந்த வலியை மாற்றி, அந்த அம்மாவுக்கு மரியாதை தரும் படமாக ப்ளூ ஸ்டார் படம் எடுக்கப்பட்டுள்ளது. 

 

இந்த படம் மக்களை எந்த அளவுக்கு ஈர்க்கிறதோ அது தான் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. எங்களின் தத்துவத்தை சரியான மொழியில், கொண்டு சென்று சேர்ப்பதால் கிடைக்கும் பலரின் நம்பிக்கையே எங்களுக்கு கிடைக்கும் வெற்றி” என பேசியுள்ளார்.