தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களை தில்லாக எடுத்து அதை  திறம்பட செய்து முடிக்கும் நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் கோலார் தங்க வயலில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை மையமாக வைத்து பீரியட் ஜானரில் உருவாகியுள்ளது. நடிகர் விக்ரம் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ள இப்படத்தில் பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜி. வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி பல முறை ஒத்திவைக்கப்பட்ட வந்தது. தற்போது படக்குழு படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 



 


மிரட்டலான மேக்கிங் வீடியோ :


'தங்கலான்' திரைப்படம் விக்ரம் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல் படமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நடிகர் விக்ரமுடன் பா. ரஞ்சித் கூட்டணி சேர்ந்துள்ளது இதுவே முதல் முறை என்பதால் படம் வேற லெவலில் இருக்கும் என்பது திரை ரசிகர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.  மிக அற்புதமாக  உருவாகியுள்ள இப்படத்தை ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்பவும் திட்டம் இருப்பதாக சில தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் இருந்தது படக்குழு வெளியிட்ட மிரட்டலான டிரைலர் மற்றும் மேக்கிங் வீடியோ. இது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியது. 


 


பலமுறை ஒத்திவைப்பு :


'தங்கலான்' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் பின்னர் அது ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.  பாராளுமன்ற தேர்தலை சுட்டிக்காட்டி படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் ஒத்தி வைத்தனர். ஆனால் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடாமலேயே படக்குழு அமைதி காத்தது. இதனால் தேர்தல் முடிந்த பிறகு 'தங்கலான்' படத்தின் வெளியீட்டு தேதி வெளியாகும் என மிகவும் ஆர்வமுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். 


 



மே மாத ரிலீஸ்?


தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 'தங்கலான்' படம் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும்  படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


 


படக்குழுவின் முடிவு என்ன?


கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் 'தங்கலான்' திரைப்படம் வெளியானால் அது சம்மர் கொண்டாட்டமாக இருக்கும் என்பது ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது. இது உறுதியான தகவலா அல்லது வெறும் வதந்தியா என்பதை படக்குழு தான் தெளிவுபடுத்த வேண்டும். அதிகாரபூர்வமான தகவலுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.