Oscars 2025 Date and Time: ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி எப்போது தொடங்கும் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருது விழா 2025:
திரைப்பட உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுக்கான மேடை தயாராக உள்ளது. ஆம்! ஆஸ்கார் விருதுகள் இந்திய நேரப்படி நாளை அதாவது மார்ச் 3ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் மீண்டும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்க உள்ளது. எமிலியா பெரெஸ், விக்கெட், எ கம்ப்ளீட் அன்னோன், தி ப்ரூடலிஸ்ட் மற்றும் அனோரா போன்ற பல விருது பெற்ற படங்கள் ஒரு இந்திய குறும்படத்துடன் இறுதிப் போட்டியில் உள்ளன. எந்தெந்த பிரபலங்கள் திரையுலகின் உச்சபட்ச விருதை நாளை கைப்பற்ற உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மன்படங்கு உயர்ந்துள்ளது.
ஆஸ்கர் விருது விழா 2025: எங்கு? எப்போது?
2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, மார்ச் 3 ஆம் தேதி காலை 5:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கும். இந்த நிகழ்ச்சி ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை நடைபெறும், மேலும் பட்டியலிடப்பட்ட படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். நீங்கள் வீட்டிலிருந்தபடியே ஆஸ்கர் விருது வழங்கும் விழாவைப் பார்க்கத் திட்டமிட்டால், ஆஸ்கரின் யூடியூப் சேனலில் இலவசமாகப் பார்க்கலாம். இது தவிர, இந்த நிகழ்வின் ஸ்ட்ரீமிங் OTT தளமான ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.
2025 ஆஸ்கார் விருது விழா: நெறியாளர் யார்?
பிரபல நகைச்சுவை கலைஞரான கோனன் ஓ'பிரையன் தான், நடப்பாண்டிற்கான ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்க உள்ளார். அவர் எம்மி விருது பெற்ற எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, அவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளரும் கூட. 2002 மற்றும் பின்னர் 2006 ஆம் ஆண்டுகளில் எம்மி விருதுகளை அவர் தொகுத்து வழங்கினார். இப்போது, அவர் அகாடமி விருது நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்குவார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தியர்களுக்கு வாய்ப்பு இருக்கா?
தயாரிப்பாளர் குணீத் மோங்காவின் இந்திய வம்சாவளி படமான 'அனுஜா' ஆஸ்கார் விருதை வெல்லும் போட்டியில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில், குணீத் மோங்காவின் 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றது. இந்நிலையில், அவரது படம் மீண்டும் வெற்றி பெறுமா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். பிரியங்கா சோப்ரா இந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர்களில் ஒருவராவார். சஜ்தா பதான் மற்றும் அனன்யா ஷான்பாக் ஆகியோர் குறும்படத்தில் இடம்பெற்றுள்ளனர். இது இப்போது நெட்ஃபிளிக்ஸில் காண கிடைக்கிறது