ஜஸ்டின் ட்ரியட் (Justine Triet) இயக்கிய ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ (Anatomy of a Fall) திரைப்படம் சிறந்த திரைக்கதைக்கான பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது. 


‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ (The Anatomy of Fall) கேன்ஸ் 2023 விழாவில் மிக உயரிய ’Palme d'Or ‘விருதை வென்றது. ஆஸ்கரில் சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை ஆகிய ஐந்து பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்தது. இதில் சிறந்த திரைக்கதைக்காக மட்டும் இந்த படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. 


‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ - த்ரில்லர் படமா?


யாருமே இல்லாத ஒரு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மர வீடு. பனி சூழ்ந்த இடந்தில் இருக்கும் தனி வீட்டில் சாண்ட்ரா (Sandra Hüller) - சாமுவேல் -(Swann Arlaud)) இணையர் மகன் டேனியல் (11 வயது) (Daniel) (Milo Machado-Graner) ஸ்நூப் (Snoop) என்ற நாயுடன் வசித்து வருகின்றனர்.


ஸ்நூப், டேனியல் இருவரும் காலை நேர நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்புகின்றனர். வீட்டு வாசலில் தன்னுடைய அப்பா ரத்த வெள்ளத்தில் அசைவின்றி கிடக்கும்  துயர்மிகு காட்சியை காண்கிறார் டேனியல். பதற்றத்துடன் வீட்டிற்குள் இருக்கும் அம்மாவிடம் செல்கிறான் டேனியல். பனி சூழந்த தரையில் பேச்சு மூச்சின்றி  கிடக்கும் தன்னுடைய கணவரை கண்டதும் அதிர்ச்சியில் போலீஸூக்கு தகவல் தெரிவிக்கிறார்.


பனிபடந்த தரையில் தலையில் அடிபட்டு ரத்த வெள்ள கிடக்கும் சாமுவேல், டேனியலை கட்டியணைத்தபடி நிற்கும் சாண்ட்ரா - இந்தக் காட்சியின் அழுத்தம் பார்வையாளர்க்கு நன்றாகவே புரிந்திருக்கும். வின்சன்ட் மேலிருந்து கீழே விழுந்து இறந்தாரா; அவர் கொலை செய்யப்பட்டடரா? சாமுவேல் மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன என்பதற்கான பதிலை கண்டடைவதை நோக்கி நகர்கிறது கதை. 


 வின்சென்ட் மாடியிலிருந்து விழுந்து இறந்துள்ளார் என்று தெரிந்ததும் அக்கம் பக்கம் யாருமே இல்லாத வீட்டில் சாண்ட்ர்டா மட்டுமே அவர் இறந்துபோன சமயத்தில் அவருடன் இருக்கிறார். ஆகவே, கணவரை சாண்ட்ரா கொலை செய்திருக்க முடியும் என்ற முடிவெடுத்து போலீஸ் வழங்கு தொடர்ந்து விசாரணை மேற்கொள்கிறது. தன்னுடைய கணவரை கொலை செய்யவில்லை என சாண்ட்ரா எவ்வளவு சொல்லியும் அதை ஏற்றுகொள்வதாக இல்லை போலீஸ். சாமுவேல் இறந்துகிடந்த இடந்தில் இருந்த ஒரே நபர் சாண்ட்ராதான்.


இந்த வழக்கின் முடிவில் என்னா ஆனது? சாண்ட்ரா தப்பித்தாரா என்பதை மிகவும் சுவாரஸ்யமாக திரை மொழியில் சொல்லியிருப்பார் ஜஸ்டின் ட்ரியட். விறுவிறுப்பான திரைக்கதை கதைக்குள் நம்மை அழைத்துச் செல்லும். இந்தப் படத்திலிருந்து சில காட்சிகள் மிகவும் அழகாக கதையை நகர்த்தி சென்றிருக்கும்.


கதை தொடங்குமிடம் - சாண்ட்ரா, பிரபல எழுத்தாளார். ஓர் இளம்பெண் சாண்ர்டாவின் வீட்டில் அவரை நேர்காணல் செய்துகொண்டிருப்பார். அப்போது சாமுவேல்  மாடியில் 50 Cent-ன் P.I.M.P பாடலின் இன்ஸ்ட்ருமென்ட்டல் வெர்ஷனை ஒலிக்கவிட்டபடி ரசித்து கொண்டிருப்பார். இப்படியான தொந்தரவிற்கிடையே நேர்காணல் தடைப்படும். சாண்ட்ராவை அதிருப்தி அடைய செய்யும். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீளும். இது நடந்த சற்று நேரத்திலேயே சாமுவேல் மரணம் நிகழும். நேர்காணல் வழங்கியபோது சாண்ட்ராவிடம் இருந்த சிரிப்பு சாமுவேல் மரணத்திற்கு பின் காணாமல்போய்விடும். கொலை வழக்கு தொடர்பான விசாரணையும் அப்பாவை கொலை செய்த அம்மாவை பற்றிய டேனியல் என்ன எண்ணுவான் என்ற சிந்தனைகளும் அவரை சோகத்தில் ஆழ்த்தும். 


சாண்ட்ரா தன்னுடைய கணவரை கொலை செய்தாரா என்பதற்கு பதில் தேடும் பயணம் அல்ல இந்தப் படம். சாண்ட்ரா - சாமுவேல், டேனியல் என தனிப்பட்ட நபர்கள் யார் என்பதை பற்றியதும்தான். எழுத்தாளரான சாண்ட்ரா லண்டனில் வசித்து வந்தார். தன் கணவனுக்காக பிரான்ஸ் வந்தார். ஒரு விபத்தில் சாண்ட்ராவின் மகன் டேனியல் கண்பார்வையை (முழுவதுமாக அல்ல.) இழக்கிறான்.  குழந்தை, வேலை, குடும்பம் என சாண்ட்ராவின் வாழ்வு மாறுகிறது. கணவன் - மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அது தொடர்பான சிக்கல்கள் பற்றியும் பேசுகிறது. கணவன் - மனைவி உறவு, சாண்ட்ரா - சாமுவேல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்ததா? திருமண வாழ்க்கை, மாற்றங்கள் தரும் அழுத்தம் உள்ளிட்ட பல விசயங்கள் மிக ஆழமாக பேசியிருக்கிறது. 
 


நீதிமன்ற வழக்கு சார்ந்த காட்சிகளும் சரியாக எழுதப்பட்டிருக்கும். வழக்கறிஞர் உள்ள எல்லா கதாபாத்திரங்களும் அவற்றிற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கும். திரைப்படம் தொடங்கி 50 நிமிடங்களுக்கு பிறகே சாண்ட்ரா தன்னை பற்றி பேசுவார். அப்போதுவரை அவரை நாம் அறிந்திருப்பதாகவே நினைத்திருப்போம். ஆனால், வழக்கு விசாரணைக்காக சாண்ட்ரா தன்னை பற்றியும் சாமுவேலை முதன்முதலில் சந்தித்தது காதல், திருமணம் உள்ளிட்டவற்றை பற்றி பகிர்ந்திருப்பார். இருப்பிலும், சாண்ட்ரா என்பரை தெரியும் என்பதை நாம் உறுதியாக சொல்லிவிட முடியாதபடி திரைக்கதை இருக்கும். சாமுவேல் தன்னுடைய வெற்றிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பார். இருவருக்கும் இடையே யார் சரி, தவறு என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல் அவர்களின் சூழல் குறித்து நாம் புரிந்துகொள்ள முயற்சிப்பதாகவே படம் அமைந்திருக்கும். குறிப்பாக, பெண் தன்னுடைய விருப்பங்கள், லட்சியம் மற்றும் தன்னுடைய நலன் ஆகியவற்றை முதன்மையாக கொண்டு வாழ்க்கையை வாழ முயற்சித்தால், அவரை இந்த சமூகம், திருமண உறவு எப்படியான அழுத்தங்களை வழங்கும் என்பதை பற்றி பேசியிருப்பதையும் படத்தில் உணர முடியும். 


சாண்ட்ரா-வாக வாழ்ந்திருப்பார் சாண்ட்ரா ஹுல்லர். அறிவாளி; தன்னுடைய கணவனை இழந்தது, கொலை செய்துவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தொடரும் வழக்கு விசாரணை என்றான பிறகு அவர் முகத்தில் நிலைத்திருக்கும் துயரரும் இறுக்கமான உணர்வையும் மிக நேர்த்தியாக தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார் ஹுல்லர். நீதிமன்ற வழக்கு காட்சிகள், டேனியல் தன்னுடைய அம்மா அப்பாவை கொலை செய்திருபாரோ என்று சிந்திக்கும் ஏற்படும் சூழல், தன்னுடைய கனவு குறித்து சாமுவேல் உடன் உரையாடும் தருணங்கள் என்று ஹுல்லரின் நடிப்பு சிறப்பாக இருக்கும். 


இந்தப் படத்தை த்ரில்லர் என்ற வகைமைக்குள் அடக்கிவிட முடியாது. சாண்ட்ரா குற்றவாளி என்பதற்கு எந்த ஆதாரமும் போதுமானதாக இல்லாத போது, கதை முடிந்துவிடும் என்ற தோணலாம். ஆனால், அடுத்து சாமுவேல் மரணத்திற்கும் சாண்ட்ராவிற்கும் தொடர்பு உள்ளதபோன்ற நிகழ்வுகள், இருவரும் விவாதிக்கும் ஆடியோ கிடைப்பது என்ற திசையில் கதை திரும்பும். இப்படி நேர்த்தியான திரைக்கதை பார்வையாளர்கை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தும் விதமாக இருக்கும்.


டேனியல் தன் அப்பாவுடன் காரில் மருத்துவமனைக்கு சென்றபோதான உரையாடல் குறித்து நீதிமன்றத்தில் சொல்வதும் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். டேனியல் பேசியதுதான் சாண்ட்ரா வழக்கிலிருந்து விடுபடுவதற்கு காரணமாக இருக்கும். இந்த வழக்கு விசாரணை காலத்தின்போது டேனியல் ‘அம்மா, நிஜமாகவே அப்பாவை கொலை செய்திருபாரோ’ என்ற மனநிலையில் இருந்து மீண்டதும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும்படி அமைந்திருக்கும். சாண்ட்ரா - ஸ்நூப் இருவரும் படுத்திருக்கும் காட்சியோடு படம் முடிந்திருக்கும். ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் கதைக்கு பெரிதும் உதவியிருந்தது என்றே சொல்ல வேண்டும்.


ஜஸ்டின் ட்ரியட் கதை சொல்லல் தனித்துவமானது. அவருடைய ‘Sibyl’ Two Ships உள்ளிட்ட படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’ திரைப்படமும் அப்படியே!