கங்குவா
சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் நேற்று நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகியது. ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் கிட்டதட்ட ரூ 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு அளவுகடந்த எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் பேசினர். திரையரங்கில் வெளியான கங்குவா எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நெகட்டிவ் விமர்சனங்களையே அதிகம் பெற்றுள்ளது.
தெளிவில்லாத திரைக்கதை , மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு படத்தில் ரசிகர்கள் பல நெகட்டிவ்களை தெரிவித்துள்ளார்கள். மேலும் படத்தைப் பார்த்த ரசிகர்கள் பின்னணி இசை மற்றும் வசனங்கள் ரொம்ப சத்தமாக இருப்பதாக விமர்சனம் தெரிவித்திருந்தார்கள். இதுகுறித்து ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் இஞ்சினியர் ரசூல் பூக்குட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
கங்குவா குறித்து ரசூல் பூக்குட்டி
" இதுபோன்ற பிரபலமான படங்களில் ஒலி பற்றி விமர்சனங்களைப் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது. ஒரு இயக்குநர் எப்போதும் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஷாட் தன் படத்தை வைப்பதில்லை. காரணம் அது பார்வையாளர்களுக்கு தெரிவதில்லை. அதேபோல் அதிகப்படியான சத்தம் ஒரு குழந்தையின் காது சவ்வை கிழித்துவிடக்கூடைய அளவு ஆபத்தானது. இதுபோன்ற சிக்கல்களில் எங்கள் கலைத்திறன் மாட்டிக்கொள்வது யாருடைய தவறு? அந்த படத்தின் சவுண்ட் இஞ்சினியரின் குற்றமா அல்லது கடைசி நேரத்தில் பதற்றத்தில் கூடுதல் விஷயங்களை சேர்க்க சொல்பவர்களின் குற்றமா ? ஒரு படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் தலைவலியுடன் திரும்பிச் சென்றால் எப்படி அவர்களுக்கு திரும்பி படம் பார்க்க வேண்டும் என்று தோன்றும். இதைப் பற்றி ஒலி கலைஞர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்