ஆஸ்கர் விருது:


உலக சினிமாவின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.  அந்த வகையில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 12-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட பிரிவுகளில் தேர்வுக்கு அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் பல்வேறு பிரிவுகளில் இறுதிப் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ள, படங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


எங்கு காணலாம்?:


இந்திய நேரப்படி இந்நிகழ்ச்சியானது மாலை 7 மணி அளவில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி, அகாடெமி அமைப்பின் Oscar.com மற்றும் Oscars.org எனும் இணையதள பக்கங்களிலும், அகாடெமியின் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளிலும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளை காட்டிலும் நடப்பாண்டிற்கான ஆஸ்கர் விருது இந்தியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், நான்கு இந்திய திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கான பரிந்த்ரைப் பட்டியலுக்கான இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.






”செல்லோ ஷோ”


இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட, குஜராத் மொழி திரைப்படமான ”செல்லோ ஷோ” சிறந்த சர்வதேச திரைப்பட விருதுக்கான பட்டியலில் இடம்பெற, இறுதி பரிந்துரை சுற்றில் இடம்பெற்றுள்ளது. பான் நலின் இயக்கியுள்ள இப்படம், இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற 14 நாடுகளை சேர்ந்த வெவ்வேறு மொழி படங்களுடன் போட்டியிட உள்ளது.


”நாட்டு நாட்டு”


ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற, RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருது போட்டியில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு அண்மையில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ள இந்த பாடலை, கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகுன்ஜ் ஆகியோர் எழுதியுள்ளனர்.


 


ஆல் தட் ப்ரீத்ஸ்:


சிறந்த ஆவணப்படத்திற்கு ஆல் தட் ப்ரீத்ஸ் என்ற ஆவணப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  இரண்டு சகோதரர்களுக்கும் அவர்கள் நேசிக்கும் பருந்துக்கும் இடையிலான ஈரமும் நேசமும் நிறைந்த அன்றாட வாழ்வின் வழியே தில் டெல்லியின் கொடூர முகம் மற்றும் சூழலியல் ஆபத்துகளை உணர்த்தும் விதமாக வெளிவந்த ”ஆல் தட் ப்ரீத்ஸ்” என்ற திரைப்படம் கடந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் விருதை வென்றது.


தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்


சிறந்த ஆவண குறும்படத்திற்கு கார்த்திகி கோன்சால்வ்ஸின் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் என்ற படம் பரிந்துரைக்கப்பட உள்ளது. ரகு என்ற யானைக் குட்டியைப் பராமரிப்பதில் நேரத்தைச் செலவிடும் தம்பதியின் வாழ்க்கையை ஆராயும், ஒரு சாத்தியமற்ற குடும்பத்தை உருவாக்குவதுபோல் இந்த ஆவண குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


தொகுப்பாளர்கள் யார்?


ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியல் இன்று மாலை வெளியாவதை தொடர்ந்து, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவியேஷன் ஹாலிவுட் பகுதியில் உள்ள  டால்ஃபி தியேட்டரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. ஆலிசன் வில்லியம்ஸ் மற்றும்  ரிஸ் அகமது ஆகியோர், 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்க உள்ளனர். கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தொகுப்பாளர் கிரிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் மேடையிலேயே அறைந்தது கடும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.