உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கார் விருதுகளுக்கான இறுதிப் பட்டியல் இன்று வெளியான நிலையில், சிறந்த ஆவணப்படத்துக்கான பட்டியலில் தமிழ்நாட்டின் நீலகிரி, முதுமலைக் காடுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட  ’தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.


24 பிரிவுகளில் விருதுகள்


உலக சினிமாவின் உச்சபட்ச விருதாகக் கருதப்படுவது ஆஸ்கார் விருதுகள். ஆண்டுதோறும்  வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகளில் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்ட 24 பல்வேறு பிரிவுகளில் திரைப்படக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது


அந்த வகையில் 95ஆவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 12ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட பிரிவுகளில் தேர்வுக்கு அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணிகள் இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.


தமிழ்நாட்டை மையப்படுத்திய ஆவணப்படம் 


அந்த வகையில் பல்வேறு பிரிவுகளில் இறுதிப் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ள கலைஞர்கள், படங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இதில் இந்தியாவைச் சேர்ந்த 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம் சிறந்த குறும் ஆவணப்படத்துக்கான இறுதிப்பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.


யானைக்குட்டி பராமரிப்பு


 






தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதிகளில் முதுமலை காடுகளில் ரகு என்ற குடும்பத்தை இழந்த யானைக் குட்டியைப் பராமரிக்கும் தம்பதியின் வாழ்வியல் குறித்து அற்புதமாக படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தற்போது சிறந்த குறும் ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரையாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.


மேலும் சிறந்த ஆவணப்படத்துக்கான மற்றொரு பிரிவில் ’ஆல் தட் ப்ரீத்ஸ்’ என்ற ஆவணப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  இரண்டு சகோதரர்களுக்கும் அவர்கள் நேசிக்கும் பருந்துக்கும் இடையிலான ஈரமும் நேசமும் நிறைந்த அன்றாட வாழ்வு, டெல்லியின் கொடூர முகம் மற்றும் சூழலியல் ஆபத்துகளை உணர்த்தும் விதமாக வெளிவந்த வெளியான இந்தத் திரைப்படம் கடந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் விருதை வென்றது.




இதேபோல் சிறந்த பாடலுக்கான பிரிவில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் இடம்பிடித்துள்ளது. இந்தப் பாடல் ஏற்கெனவே சிறந்த பாடலுக்கான கோல்டன் க்ளோப் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.


ஆஸ்கார் விழா தேதி நேரம்


ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா மார்ச் மாதம் 12ஆம் தேதி இந்திய நேரப்படி இந்நிகழ்ச்சியானது மாலை 7 மணி அளவில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி, அகாதெமி அமைப்பின் Oscar.com மற்றும் Oscars.org எனும் இணையதள பக்கங்களிலும், அகாதெமியின் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகளிலும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவியேஷன் ஹாலிவுட் பகுதியில் உள்ள  டால்ஃபி தியேட்டரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. ஆலிசன் வில்லியம்ஸ் மற்றும்  ரிஸ் அகமது ஆகியோர், 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்க உள்ளனர். கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தொகுப்பாளர் கிரிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் மேடையிலேயே அறைந்தது கடும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.