கோவை சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான மறு வாக்கு எண்ணிக்கை நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த பாதுகாப்புடன் நடந்தது.


தமிழ்நாட்டில் கடந்த 2019 ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் பெரியநாயகன்பாளையம் ஒன்றியம் சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற சுதா என்பவரும், அதிமுக ஆதரவு பெற்ற செளந்திரவடிவு என்பவரும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது திமுக ஆதரவு பெற்ற சுதா 2553 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு என்பவர் 3 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றிப் பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்பட்டது.


இதை எதிர்த்து சுதா கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த கோவை முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி, மறு வாக்கு எண்ணிக்கையினை அடுத்த் 15 நாட்களுக்குள் நடத்த வேண்டும் என உத்திரவிட்டார். சின்னதடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலுக்கு மறு வாக்கு எண்ணிக்கையை நடத்த உரிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்கவும், கோவை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மறு வாக்கு எண்ணிக்கையை ஒளிப்பதிவு செய்து அதை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும், மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை கொண்டே அடுத்தக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிமன்ற உத்திரவில் குறிப்பிடப்பட்டது.




அதன்படி இன்று குருடம்பாளையம் அருகே உள்ள அருணா நகர் சமுதாய நலக்கூடத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்தல் அறிவிப்பு நோட்டீஸ் இரண்டு தரப்பினருக்கும் பெரியநாய்க்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது. மேலும் தேர்தல் நடத்தும் அலுவலராக ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டார்.


இதற்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் தேர்தலில் பதிவான வாக்குச்சீட்டுகள் அடங்கிய 12 பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இன்று பிற்பகல் 12 மணியளவில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் எனவும், தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை நீதிமன்றம் அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண