அமெரிக்கர்களை விமர்சித்த காரணத்தினால் இந்தப் படம் ஆஸ்கரில் புறந்தள்ளப் பட்டதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.
கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers Of The Flower Moon)
மார்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் லியோனார்டோ டிகார்ப்ரியோ, லிலி கிளாட்ஸ்டோன், ராபர்ட் டி நிரோ நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers Of The Flower Moon). அமெரிக்க பழங்குடி இன மக்களான ஓசேஜ் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வந்த நிலத்தில் இருந்த கச்சா எண்ணெய் வளத்திற்காகவும், அவர்களிடம் இருந்த செல்வத்தை அபகரிக்கும் முயற்சியாக அவர்கள் மர்மமான முறையில் கொல்லப் பட்டார்கள்.
இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி இந்தப் படத்தை இயக்கியுள்ளார் மார்டின் ஸ்கார்செஸி. நேர்கோட்டிலான கதைசொல்லல், மிக நிதானமான காட்சிகள் என பார்வையாளர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்தும் விதத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு என மொத்தம் 10 பிரிவுகளின் கீழ் இப்படம் பரிந்துரைக்கப் பட்டது.
இப்படத்தில் டிகாப்ரியோவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது ஆனால் இப்படத்தில் கதாநாயகியாக லிலி கிளாட்ஸ்டோன் நடிப்பு நிச்சயம் அனைவரையும் வசீகரிக்கும் படி அமைந்திருந்தது. அமெரிக்க பழங்குடி இனத்தை பூர்வீகமாகக் கொண்ட லிலி கிளாட்ஸ்டோன் இப்படத்தில் ஒசேஜ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு அவர் பரிந்துரைக்கப் பட்டிருந்தார். இந்தப் பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் முதல் பழங்குடி இனப்பெண் லிலி கிளாட்ஸ்டோன்.
ஏன் ஒரு விருது கூட வழங்கப்படவில்லை?
இப்படியான நிலையில் இன்று ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநருக்கான விருது கிறிஸ்டோஃபர் நோலனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை எம்மா ஸ்டோன் வென்றுள்ளார். 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் படத்திற்கு ஒரு விருதுகூட வழங்கப் படாதது குறித்து ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
குறிப்பாக லிலி கிளாட்ஸ்டோனுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தால் வரலாற்றில் ஆஸ்கர் விருது வென்ற முதல் அமெரிக்க பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்ணாக அவர் இருந்திருப்பார். செவ்விந்திய பழங்குடிகளுக்கு அமெரிக்கர்கள் செய்த கொடூரங்களை விமர்சிக்கும் வகையில் இந்தப் படம் அமைந்ததால் இந்தப் படம் வேண்டுமென்றே புறந்தள்ளப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். முன்னதாக மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஐரிஷ் மேன் படம் இதே நிலையை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.