இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் கவிதா செல்வராஜ், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானால் தன்னுடைய வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மாறிய சம்பவத்தை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா இயக்கத்தில் பிகில் படம் வெளியானது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் அவர்களை சாதிக்க சொல்லும் வகையில் பல விதமான காட்சிகள் இடம்பெற்றது. குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் எழுதிய “சிங்கப்பெண்ணே” பாடல் பெண்மையை போற்றும் வகையில் இடம் பெற்று அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றது.
இப்படியான நிலையில் இந்த பாடல் இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் கவிதா செல்வராஜின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?. இதனை நிகழ்ச்சி ஒன்றில் அவரே பகிர்ந்துள்ளார்.
கபடி என்றால் கவிதா
2007 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 4 ஆண்டுகள் சர்வதேச அளவில் கபடியில் தங்கப்பதக்கம் வென்றேன். கபடி என்றால் கவிதா என இந்தியா முழுக்க பேசும் அளவுக்கு பெயர் புகழோடு இருந்தேன். ஆனால் திருமணத்துக்கு பிறகு எல்லாவற்றையும் அப்படியே விட்டுட்டேன். 2013 ஆம் ஆண்டுக்கு ரொம்ப விளையாட்டு சேனல் கூட பார்க்க மாட்டேன். ரொம்ப கஷ்டமா இருக்கும். 2019ல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிங்கப்பெண்ணே பாடல் வந்தது. ரொம்ப நாள் கழிச்சி விளையாட்டு சம்பந்தப்பட்ட படமான பிகிலை நான் பார்த்தேன். தினமும் வீட்டில் எல்லாரும் தூங்கிய பிறகு இரவு 12 மணிக்கு அழுவேன். நான் எப்படியெல்லாம் இருந்தேன். இப்ப வீட்டுல சமைச்சிட்டு ஒரு சாதாரணமான பெண்ணாக இருக்கிறேனே.. என நினைப்பேன். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எதுவுமே போகமாட்டேன். ஏனென்றால் விளையாட்டுத் துறையில சாதித்த என்னோட நண்பர்கள் எல்லாரும் நல்ல நிலைமையில இருக்குறாங்க. வேலை, புகழ்ன்னு அதே துறையில இருக்காங்க.
ஆனால் நான் வீட்டிலேயே இருக்கிறேன்னு நினைப்பேன். அப்போது பிகில் படத்துல ஒரு வசனம் வரும். ‘நம்ம நல்லா வாழ்ந்து காட்டுறதுல்ல தான் நம்ம வாழவே கூடாதுன்னு நினைக்கிறவங்களுக்கு நல்ல சவுக்கடி இருக்கு’ என இருக்கும். மேலும் ‘கல்யாணம் ஆனவங்களாலயும் சாதிக்க முடியும்’ என்ற வசனமும் இருக்கும். இந்த வார்த்தைகள் ரொம்ப ஆணித்தரமாக என் மனதில் பதிந்தது.
நாம திரும்பவும் ஆரம்பிப்போம். நாம யாருன்னு காட்டுவோம் என நினைத்தேன். என்னோட சொந்தக்காரர்களிடம் நான் திருமணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேன் என சொன்னதில்லை. அவர்கள் உனக்கு என்ன தெரியும் என நக்கலாக பார்த்தார்கள். ஆனால் நான் எவ்வளவு பெரிய ஆளுன்னு செயலில் செய்து காட்டணும்ன்னு நினைக்க வச்சது சிங்கப்பெண்ணே பாடல் தான்.
நான் திரும்பவும் களத்தில் இறங்கினேன். பிகில் படம் பார்க்கும்போது நான் அழுதுவிட்டேன். அதன்பிறகு என் கணவர், அவரது குடும்பம் இவ்வளவு சாதிச்சிட்டு நீ என் சும்மா இருக்க என கூறி என்னுடைய 5 வயது குழந்தையை நாங்க பார்த்துக்கிறோம் என சொன்னார்கள். இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக சேர்ந்தேன். இந்தியாவில் 2 பேர் தேர்வு செய்திருந்தார்கள். அதில் ஒரு பெண் நான் தான். குஜராத் காந்தி நகரில் பயிற்சியாளராக சேர்ந்தேன்.
2023 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளராக சேர்ந்து தங்கப்பதக்கம் ஜெயிக்க வைத்தேன். 2018ல் பெண்கள் வெள்ளிப் பதக்கம், ஆண்கள் வெண்கல பதக்கமும் வாங்க வைத்தேன். இது எல்லாத்துக்கும் முழுக்க முழுக்க காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் சார் தான். அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் எப்படி வெளியே போனேனோ அப்படியே திரும்ப் வந்துட்டேன். அதற்கு உங்கள் பாட்டு வரிகள் உத்வேகமாக இருந்துள்ளது. இதனை ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டு, “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி கவிதா .. உயர்ந்து கொண்டே இருங்கள்” என தெரிவித்துள்ளார்.