95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பிரண்டன் பிரேசர் வென்றார். அவருக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


ஆஸ்கர் விருது வழங்கும் விழா  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  இன்று நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில்   All Quiet on the Western Front, Everything Everywhere All at Once, The Whale, அவதார் -2 , பிளாக் பேந்தர் வுகாண்டா ஃபார் எவர், ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட பல படங்கள் ஆஸ்கர் விருதுகளை வென்றது. இதில் தி வேல் (The Whale) படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பிரண்டன் பிரேசருக்கு கிடைத்தது. 


1968 ஆம் ஆண்டு பிரண்டன் பிரேசர் பிறந்த 1990 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள நடிப்பு கல்லூரியில் நடிப்பில் பயிற்சி பெற தொடங்கினார் அதன் வழியாக ஹாலிவுட்டில் ஒரு நடிகராக தன்னை முன்னிறுத்த முடிவு செய்த பிரேசர் “டாக் ஃபைட்” என்னும் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு வெளியான “என்சினோ மேன்” என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்த அவருக்கு பாராட்டுகள் குவிந்தது. 


இதன்பின்னர் ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக மாறிய பிரண்டன் பிரேசர் School Ties, ட்வெண்டி பக்ஸ், சன் இன் லா, யங்கர் அண்ட் யங்கர், வித் ஹானர்ஸ், இன் தி ஆர்மி நௌ, தி ஸ்கவும், தி மம்மி ரிட்டன்ஸ், ஜர்னி டூ எண்ட் ஆஃப் தி நைட் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் 2022 ஆம் ஆண்டு “தி வேல் (The Whale)” படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பிரண்டன் பிரேசருக்கு கிடைத்துள்ளது. 


இந்த படத்தில் அதிக எடைக் கொண்ட சார்லியின் பாத்திரத்தை பிரேசர் ஏற்று நடித்தார்.  தனது இளம் வயது மகளுடனான உறவை மீட்டெடுக்க முயற்சிக்கும் ஆங்கில ஆசிரியராக வரும் பிரேசர் சோகம், வலி ​​மற்றும் உயிருக்கு ஆபத்தான உடல் பருமன் ஆகியவற்றுடன் வாழும் ஒரு கதாபாத்திரத்தில் தன் உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கியிருந்தார். மேலும் விருதை பெற்றவுடன் பிரேசன் கண்கலங்கினார். இந்த வெற்றியின் மூலம் தனது கேரியர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என அவர் தெரிவித்துள்ளார். 


ஆஸ்கர் விருதின் இறுதிப்பட்டியலில் Austin Butler (Elvis), Colin Farrell (The Banshees of Inisherin), Brendan Fraser (The Whale), Paul Mescal (Aftersun), Bill Nighy (Living) ஆகியோரில் சிறந்த நடிகராக பிரண்டன் பிரேசர் விருது வென்றுள்ளார். அதேசமயம் “தி வேல் (The Whale)” படம் சிறந்த நடிகர்,  சிறந்த ஒப்பனை ஆகிய இரு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.