வாசமில்லா மலரிது…வசந்தத்தை தேடுது…
வைகை இல்லா மதுரை இது…
எஸ்.பி.பாலசுப்ரமணியன் குரலில் ஒலித்த இந்த பாட்டுக்கு தியேட்டரில் விசில் பறக்கும். எல்லோர் தலையிலும் கலர்கலராக பேப்பர்கள் தூவப்பட்டிருக்கும். தியேட்டரில் முக்கால்வாசி பேர் கல்லூரி மாணவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். 200 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ்த் திரையுலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தது இந்தப் பாடலுக்கான ஒரு தலை ராகம் திரைப்படம். 1980 ஆம் ஆண்டு வெளியானது ஒரு தலை ராகம். இயக்கியது டி.ஆர்.ராஜேந்தர். அதுதான் அவரது முதல் படம். ஆனால் அந்தப் படத்தில் அவர் பெயர் இ.என்.இப்ரஹிம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
அப்படியென்ன ஸ்பெஷல்..
ஒரு தலை ராகம் படத்தில் அப்படி என்னதான் மக்களை ஈர்த்தது என்று பார்த்தால் யதார்த்தம். யதார்த்த சினிமாக்களுக்கான வெற்றிடம் இருந்த காலகட்டத்தில் தான் இயக்குநர் பாரதிராஜா 16 வயதினேலே என்று காவியத்தைப் படைத்து கிராமத்தை கண்முன் நிறுத்தி மயிலை நம் மனங்களை இன்றுவரை வருட வைத்திருக்கிறார்.
அதேபோல் ஒரு அனுபவத்தைக் கொடுத்தார் டி.ராஜேந்தர். ஒரு தலை ராகம் என்ற பெயர் ஏதோ ஈர்ப்புவிசையை கொடுக்க மக்கள் தியேட்டர்களுக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் எதிர்பாராத கதைக்களத்தையும் இசையையும் வசனத்தையும் அழகாக கொடுத்திருந்தார் டி.ராஜேந்தர்.
ஒரு தலை ராகம் கதை என்ன?
மாயவரத்தின் புறநகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரியில் முதுகலை படிப்புபடிக்க மாயவரத்தைச் சேர்ந்த இளைஞன் ராஜா சேர்கிறான். கல்லூரிக்கு ரயிலில் செல்லும் ராஜா அதே ரயிலில் அடக்கம்மிக்க சுபத்திராவைக் கண்டு அவள் மீது காதல்கொள்கிறான். சுபத்திராவும் ராஜாவினால் ஈர்க்கப்படுகிறாள் என்றாலும் அவள் அதை தன் குடும்பச்சூழலால் வெளிகாட்டிக்கொள்ளாமல் இருக்கிறாள். தன் காதலை சுபத்திராவிடம் ராஜா தெரிவித்தும், அனுக்கு பிடிகொடுக்காமல் சுபத்திரா விலகி செல்கிறாள். தன் காதலுக்கு விடை தெரியாத ராஜா அந்த ஏக்கத்தில் சரியாக உண்ணாமலும், உறங்காமலும் உடல் தளர்ச்சி அடைகிறான். கல்லூரியின் கடைசி நாளில் ராஜாவின் நண்பன் மூர்த்தி சுபத்திராவின் மௌனத்தை உடைக்கும் விதமாக பேசுகிறான். இதனால் மனம் தெளிவடையும் சுபத்திரா மறுநாள் ரயிலில் ராஜாவிடம் தன் வந்து தன் காதலை தெரிவிக்கிறாள். பதில் சொல்லாமல் இருக்கும் ராஜாவைத் தொடும்போது அவன் இறந்துவிட்டது தெரிந்து கதறுகிறாள்.
இது இப்போது வேண்டுமானால் வழக்கமான திரைக்கதையாக இருக்கலாம். ஆனால் இன்று இருக்கும் பல்வேறு கல்லூரி கதைக் களங்களுக்கும், காதல் கதைகளுக்கும் அடிப்படை இதுதான். முரளியின் இதயம் படம் கூட இந்த சாயலைக் கொண்டிருக்கும். ஒரு தலை ராகம் காதல் படங்களுக்கு ஒரு கைடு. அந்தச் சாயல் இல்லாமல் இன்றுவரை படம் எடுப்பது கடினமாகத்தான் இருக்கும்.
கல்லூரி என்றால் இப்படித்தான் இருக்கும். மாணவர்கள் இப்படித்தான் இருப்பார்கள், பேசுவார்கள். அவர்களின் உலகம் இதுதான். நட்பிற்கு எல்லை கிடையாது எனப் பல்வேறு விஷயங்களையும் அச்சு அசலாகக் காட்டிய திரைப்படம் ஒரு தலை ராகம். அதுதான் அப்படத்தின் வெற்றியும் கூட.
1980 மே 2ல் ஒரு தலை ராகம் படம் வெளியானது. நாளை மே 2, 2023 ஆன் ஆண்டுடன் இப்படம் வெளியாகி 43 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்று பார்த்தாலும் ஒரு புதுமையான அனுபவத்தைக் கொடுக்கக்கூடியது.