விஜய் மக்கள் இயக்க ஐடி விங் நிர்வாகிகளை 26ம் தேதி நடிகர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிர்வாகிகளை சந்திக்கிறார் விஜய்..!
நடிகர் விஜய் தனது ரசிகர்கள் அடங்கிய விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த, ஐடி விங் நிர்வாகிகளை வரும் 26ம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சுமார் 1000 பேருக்கு, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், மகளிர் அணி, இளைஞர் அணி என புதியதாக 10 அணிகளை உருவாக்குவது தொடர்பாகவும், நகர மற்றும் ஒன்றிய அமைப்புகளை ஒன்றிணைப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, அடுத்த மாதம் 17ம் தேதி வரவுள்ள பெரியாரின் பிறந்தநாளை கொண்டாடுவது குறித்தும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் நடிகர் விஜய் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம்போல், பனையூரில் உள்ள விஜயின் இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் விஜய் அடுத்தடுத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த சந்திப்பு:
லியோ படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு கடந்த சில மாதங்களாக அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்டம் தோறும் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். அதை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட விஜய் அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார். விஜய் அறிவுறுத்தலின் பேரில் காமராஜர் பிறந்தநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் இரவு நேர பாடசாலையை விஜய் மக்கள் இயக்கம் தொடங்கி நடத்தி வருகிறது. இதனிடையே, கடந்த 5ம் தேதி விஜய் மக்கள் இயக்கத்தின் வக்கீல் அணி கூட்டமும், அதை தொடர்ந்து 6ம் தேதி கேரள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் சென்னை பனையூரில் நடைபெற்றது. இந்நிலையில் தான், விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில், ஐடி விங் நிர்வாகிகளை வரும் 26ம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் விஜய்?
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் விஜய் நேரடியாக களமிறங்க உள்ளதாகவும், அதற்காகவே விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவது குறித்து அடுத்தடுத்து அவர் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.