திரையுலகில் ஒரு சில நடிகர்கள் மட்டும் தான் மொழிகள் கடந்தும் மின்னுவர். அவ்வாறாக நடிப்பால் ஒளிர்ந்த நட்சத்திரங்களில் பாலிவிட் நடிகர் ஓம்புரியும் ஒருவர்.
2017 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி அந்த நட்சத்திரம் திரைவானில் இருந்து மட்டும் மறைந்தது. ஆனால் இன்றளவும் கலா ரசிகர்களின் சிந்தனையில் நீடித்த நிலைத்த நட்சத்திரமாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் காலன் சற்றே இரக்கமற்றவனாக 66 வயதில் அந்த உன்னதக் கலைஞரை கவர்ந்து சென்றான்.
ஹரியானா டூ ஹாலிவுட்:
ஹரியானாவில் பிறந்தவர் ஓம் புரி. இவரது தந்தை ரயில்வே துறையில் பணியாற்றியவர். இவரது பிறப்புத் தேதி உறுதியாக அறியப்படவில்லை. ஓம் புரியின் தாய் அவரிடம் நீ தசராவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் பிறந்தாய் என்று கூறுவாராம். அதைவைத்தே அவர் தனது பிறந்தநாளை 18 அக்டோபர், 1950 என்று பின்னாளில் பதிவு செய்துள்ளார்.
காக்காமுட்டை சகோதரர்கள்:
தந்தை ரயில்வேயின் கடைநிலை ஊழியர். அவர் ஏதோ வழக்கில் சிக்கியதால் குடும்பம் வறுமையில் உழன்றது. ஓம் புரியும் அவரது சகோதரர் வேத் பிரகாஷ் புரியும் கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்தனர். காக்கா முட்டை படத்தில் வரும் சகோதரர்கள் போல் கூட்ஸ் வண்டியிலிருந்து விழும் கரியைக் பொறுக்கி விற்றுள்ளனர். கஷ்டத்திலும் கல்வியைக் கைவிடாத ஓம்புரி டெல்லியில் நாடகக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் இந்தியாவின் பிரபல நிறுவனமான எஃப்டிடிஐ எனப்படும் ஃபில்ம் அண்ட் டெக்னாலஜி மையத்தில் சேர்ந்தார்.
1967ல் தொடங்கிய பயணம்:
1976ம் ஆண்டு 'காஷிராம் கோட்வால்' என்ற மராத்தி படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார். அம்ரீஷ் புரி, நஷ்ரூதின் ஷா, ஷபானா ஆஸ்மி போன்ற நடிகர்களோடு நடித்துப் பிரபலமானார். இந்தி, தமிழ் மட்டுமல்ல ஆங்கிலப் படத்திலும் நடித்திருகிறார். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான படங்களிலும் நடித்து ஹரியானா டூ ஹாலிவுட் எனப் பிரபல திரைக்கலைஞராக அவர் உலா வந்தார்.
பிரிட்டிஷ் படங்களான 'My Son the Fanatic', 'East is East', 'The Parole officer' உள்ளிட்டவற்றில் நடித்தார். அதில் அவரது நடிப்பு சர்வதேச கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து 'City of Joy', 'The Ghost and the Darkness' போன்ற ஹாலிவுட் படங்களில் ஜாக் நிக்கேல்சன், வால் கில்மர், டாம் ஹாங்க்ஸ், ஜுலியா ரோபட்ஸ் உள்ளிட்ட நடிகர்களோடு நடித்து பிரபலமானார். இந்தித் திரையுலகில் இவருக்கென தனி அடையாளம் பெற்றுத்தந்த திரைப்படம் 'ஆக்ரோஷ்'. இப்படத்தில் இவரின் அபார நடிப்பு வெளிப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் நடித்தமைக்காக பல்வேறு விருதுகளையும் வென்றார். 1983ல் முதல் தேசிய விருதைப் பெற்றார். இந்தியில் இவர் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் தொடங்கி பாலிவுட் கான்களான ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் ஆகியோர் வரை அனைவருடனும் ரவுண்டு கட்டி நடித்துள்ளார்.
ஹேராம்..
தமிழில் ஓம்புரி ஹேராம் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார். இந்தியில் சாச்சி 420 என்ற அவ்வை சண்முகி ரீமேக்கிலும் ஓம்புரி கமலுடன் இணைந்து நடித்தார். கமலுக்கும் ஓம் புரிக்கும் ஹேராம் சினிமாவைத் தாண்டிய நட்பு உண்டு. அதனாலேயே அவர் மறைவின்போது, "அவர் மறைந்துவிட்டார் எனக் கூறும் துணிச்சல் எப்படி வந்தது. அவர் என்றும் நிலைத்திருப்பார் அவருடைய படைப்புகள் வாயிலாக" என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்