தமிழ் தொலைக்காட்சியில்  பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருபவர் அர்ச்சனா.  சன் டிவியில் ‘இளமை புதுமை’, ‘காமெடி டைம்’ உள்ளிட்ட  நிகழ்சிகள் மூலம்  பரிட்சியமானவர் . இவர் பிக்பாஸ்  நிகழ்சியில் கடந்த சீசனில் கலந்துக்கொண்டார். அப்போது அவர் பேசிய “ அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா “ என்ற ஒற்றை வசனம் மிக பிரபலம்.  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதனையெல்லாம் கண்டுக்கொள்ளாத அர்ச்சனா தனது வேலைகளை முழுமையான ஈடுபாட்டுடன் செய்து வந்தார். தனது மகளுடன் இணைந்து வாவ் லைஃப் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அந்த சேனலில் அர்ச்சனா வெளியிட்ட பாத்ரூம் டூர் வீடியோ வைரலாகி சர்ச்சைக்குள்ளானது. இதனால் மீண்டும்  அவரை பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள் . இது கார்பரேட் கிரியேட்டர் VS சோலோ கிரியேட்டர் என்ற மிகப்பெரிய விவாதத்தையே உருவாக்கியது.




இந்நிலையில் தொகுப்பாளர் அர்ச்சனாவுக்கு மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக  அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்கு முன்னதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அது குறித்த விவரங்களை தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார். இது அவரது ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை நண்பர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது  இன்ஸ்டாகிராமில் இது குறித்து பதிவிட்ட அர்ச்சனா “எப்போதும் இதயத்திலிருந்து இயங்கும் பெண் நான். அதனால்  கோபமடைந்த என் மூளை  இதயத்தை விட  வலிமையானது என்று எனக்குக் காட்ட விரும்பியுள்ளது. தற்போது அது ஒரு சிறிய பிரச்சினையைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. மண்டையில் இருக்கும் சிறிய ஓட்டையை நான் அடைக்க வேண்டும் “ என தனக்கே உரிய பாணியில் தன்  பிரச்சனை குறித்து விவரித்தார். மேலும் அறுவை சிகிச்சை நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி 11 மணிவரை நடைபெறும் என தெரிவித்த அர்ச்சனா , ஒரு வாரத்திற்குள் வீடு திரும்பி விடுவேன் என சிகிச்சையின் முழு விவரங்களையும் பகிர்ந்துக்கொண்டார்.






 


நேற்று அர்ச்சனாவிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில்  மகள் ஸாரா ,  மருத்துவமனையில் இருக்கும் தனது அம்மாவின் உடல் நிலை குறித்து தெரிவித்துள்ளார்.  இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்ட ஸாரா ” நிறைய பேர் அச்சுமா உடல்நலம் குறித்து கேட்டுக்கிட்டே இருக்கீங்க,  அம்மா அறுவை சிகிச்சைக்கு பிறகு சாதாரண சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். தற்போது நலமாக இருக்கிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்  நான் தொடர்ந்து அவங்களோட உடல்நிலை குறித்து உங்களுக்கு தெரியப்படுத்துறேன் எல்லோருக்கும் நன்றி “ என குறிப்பிட்டுள்ளார்.