அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி இன்று கிருஷ்ணகிரியில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது, "யாரையோ சிறுமைப்படுத்த வேண்டும் என்று விஷமத்தனமாக சிந்தனையில் இறங்குவது நாட்டுக்கு நல்லது அல்ல. இதை யார் கொண்டு வந்திருந்தாலும், அதை யார் முன்னிறுத்தி இருந்தாலும் அதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அறிவியல் உலகத்தில் உலகமே கைக்குள் வந்துவிட்ட சூழல் வந்துவிட்டது. பல்வேறு பாதுகாப்பு, வளர்ச்சி எல்லாம் வருகின்றபோது நாடு வளமாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் சிறு, சிறு மாநிலங்களாக பிரியும்போது அந்த பலம் நிச்சயமாக குறையும். தமிழ்நாடைப் பொறுத்தவரை கடைகோடி கன்னியாகுமரியில் இருப்பவர்கள் முதல் சென்னையில் உள்ள மக்கள் வரை இது நம்நாடு தமிழ்நாடு என்ற சிந்தனையோடுதான் உள்ளனர்.
இதுபோன்ற தூய எண்ணத்தில் வாழும் மக்களுக்கு இதுபோன்ற விதைகளை அவர்கள் மனதில் தூவ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வை கொண்ட அண்ணாவே நாட்டின் வளர்ச்சிக்காக திராவிட நாடு என்ற கோரிக்கையை கைவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கடந்த வாரம் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, மத்திய அரசு வெளியிட்ட விவரக்குறிப்பில் எல்.முருகன் பிறந்த நாமக்கல் மாவட்டத்தை கொங்கு நாடு என்று குறிப்பிட்டிருந்தனர். இதற்கு தி.மு.க. தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கி கொங்குநாடு உருவாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பா.ஜ.க.வினர் கோரிக்கை விடுத்தனர். சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் மக்கள் விருப்பத்தின் அடிப்படையிலே மாநிலங்கள் பிரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் விரும்பினால் புதிய மாநிலங்கள் உருவாக்கலாம். தி.மு.க.வினர் எவ்வாறு ஒன்றிய அரசு என்று சொல்வதை அவர்களின் விருப்பம் என்று சொல்கின்றனரோ, அதேபோல கொங்குநாடு என்று சொல்வது அப்பகுதி மக்களின் விருப்பம் என்று கூறியிருந்தார்.
தி.மு.க. மக்களவை உறுப்பினர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்தபோது, தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது. அந்த கனவெல்லாம் யாரும் காண வேண்டாம். பாதுகாப்பான ஆட்சியின் கீழ் இருப்பதால் தமிழகம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். அரசியல் சட்டத்தின் ஒன்றிய அரசு என்றுதான் உள்ளது. அது நாட்டுக்கு எதிரானது அல்ல என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கொங்குநாடு தனி மாநிலம் என்று தவறான விதையை மக்கள் மனதில் விதைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள சூழலில், கொங்குநாடு என்பது பா.ஜ.க.வின் சொந்த கருத்தல்ல என்று அக்கட்சியின் மாநில ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.