1981 ம் ஆண்டு இதே நாள் அக்டோபர் 26 , தீபாவளிக்கு முதல் நாள். அன்றைய தினம் தீபாவளியை முன்னிட்டு முதல்நாளே திரைப்படங்கள் சில வெளியாகின. அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் திலகம் சிவாஜி, பாக்யராஜ் ஆகியோரின் படங்கள் அதில் குறிப்பிடத்தக்கவை. அந்த வரிசையில் எப்படி இருந்தது அன்றைய போட்டி... இதோ ஒரு விரிவான அலசல்...


 


அந்த 7 நாட்கள்:




எத்தனை நாட்களை கடந்தாலும் ‛அந்த 7 நாட்கள்’ மறக்க முடியாதது. ‛பாலகாட்டு மாதவன்’ என்கிற கதாபாத்திரத்தை அழுத்தமாக பதிவ வைத்த திரைப்படம். இப்படியும் ஒரு காதல், இதுவும் காதல் என அழகான காதல் கதையை, இன்னும் சமூக புரட்சியோடு சொல்லியிருப்பார் பாக்யராஜ். பாக்யராஜ் படங்களில் இருக்கும் அதே காமெடி, காதல், கவலை என எல்லாமே இதிலும் இருக்கும். முதல் பாதி எல்லாமே ஒரே கலகலப்பு. மறுபாதி எல்லாமே காதல் சோகம். சினிமாவில் இசையமைப்பாளர் வாய்ப்புக்காக வரும் ஒரு இளைஞன், வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் பெண் மீது காதல் கொள்கிறார். அந்த காதல் ஒரு கட்டத்தில் கை நழுவ, அந்த பெண்ணுக்கு வேறு ஒரு ஆணுடன் திருமணமாகிறது. தன் மனைவி எதையோ இழந்து அழுகிறார் என்பதை புரிந்து கொண்ட அந்த கணவன், அவளது காதலனுடன் சேர்த்து வைக்க முயற்சிக்கிறான். அந்த பெண் என்ன முடிவு எடுத்தால்? இசையமைப்பாளர் கனவோடு வந்த பாலக்காடு மாதவனின் எதிர்காலம் என்ன ஆனது? புதுமை படைக்க நினைத்த கணவரின் எண்ணம் நிறைவேறியதா? இது தான் அந்த 7 நாட்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாக்யராஜ் இயக்கி நடித்த இத்திரைப்படத்தில் அவருடன் அம்பிகா, ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிகக்குறைந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு, நிறைவான ஒரு கதையை அதுவும் மெகா ஹிட்படத்தை கொடுத்து மூக்கில் விரல் வைக்க வைத்தார் பாக்யராஜ். 


கீழ் வானம் சிவக்கும்:




நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரிதா, ஜெய்சங்கர், சரத்பாபு, மேனகா ஆகியோர் நடித்த திரைப்படம் கீழ் வானம் சிவக்கும். வி.ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இரண்டாம் தலைமுறை நடிகர்களுக்கு போட்டியாக சிவாஜி கணேசன் நடிப்பில் அசத்திய திரைப்படம். இது ஒரு பழிவாங்கும் படலம் தொடர்பான கதை. டாக்டர் துவாரகாநாத்தாக சிவாஜி கணேசன். ஒரு டாக்டராக, குடும்பத்தலைவனாக எதில் உண்மையோடு இருக்கப் போகிறோம் என்பதை மையமாக வைத்து அழகான திரைக்கதையில் பயணிக்கும் கதை. சிவாஜி என்கிற மகா கலைஞனோடு போட்டி போட்டு நடித்திருப்பார் சரிதா. இருவருக்குமான காட்சிகள் கைதட்டலை வாங்கிக் கொண்டே இருக்கும். தீபாவளி சிறப்பு வெளியீடாக முக்கிய படங்கள் களமிறங்கிய போது, சிவாஜி என்கிற மகாநடிகனை நம்பி களமிறங்கிய திரைப்படம், நல்ல பாராட்டையும், வசூலையும் பெற்றது. 


ராணுவ வீரன்:




எம்.ஜி.ஆர்.,க்காக ஆர்.எம்.வீரப்பன் தயார் செய்து வைத்திருந்த கதை. அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர்., தீவிர அரசியலில் இருந்ததால் அவருக்கு பதில் ரஜினியை வைத்து எடுத்து திரைப்படம். ஆர்.எம்.வீரப்பன் மற்றும் தியாகராஜன் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தை ரஜினியின் ஆதர்ஷ இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். சத்யா மூவிஸ் என்கிற பெயரி பேனரில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளியான இத்திரைப்படத்தில் ரஜினி-சிரஞ்சீவி என இரு சூப்பர் ஸ்டார்கள் நடித்திருந்தனர். ரஜினி விடுமுறைக்கு வரும் ராணுவ வீரர். குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளியாக சிரஞ்சீவி. இளைமையில் இருவரும் நண்பர்கள். ஏன் சிரஞ்சீவி இந்த முடிவுக்கு வருகிறார், அதற்கு காரணம் என்ன? அதன் பின் ரஜினி செய்யும் வேலை என்ன என்பது தான் கதை. தமிழில் மட்டுமல்லாது பாண்டிபொட்டு சிம்ஹம் என்கிற பெயரில் 1982ல் தெலுங்கிலும் வெளியானது இத்திரைப்படம். இதே நேரத்தில் இந்தியிலும் வெளியிடப்பட்டது. பெரிய எதிர்பார்ப்புடன் வந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 


தண்ணீர் தண்ணீர்:




வெற்றிக்காக படங்களை எடுக்காமல், வெற்றி பெறுபவர்களுக்காக படங்களை எடுப்பவர் கே.பாலசந்தர். அவரது அந்த வரிசையில் முக்கியமான திரைப்படம் ‛தண்ணீர் தண்ணீர்’ . தண்ணீரால் ஒரு கிராம மக்கள் படும் பாடு, சிரமம், கண்ணீர் தான் கதை. தண்ணீரின் முக்கியத்துவத்தை 1981ல் இவ்வளவு அழுத்தமாக வேறு யாரும் கூறிவிட முடியாது. படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் சரிதா பாத்திரம் தான் படத்தின் ஒரே ஐக்கானிக்காக இருக்கும். ஒரு சொட்டு நீரின் அருமை தெரிய வேண்டுமா? தண்ணீர் தண்ணீர் படத்தை தவிர வேறு எந்த உதாரணமும் அதற்கு இல்லை என்று கூறலாம். கோமல் சுவாமிநாதனின் கதைக்கு அவ்வளவு அற்புதமான உயிர் கொடுத்திருப்பார் பாலசந்தர். அதுமட்டுமின்றி, எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையும் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை என மூன்று தேசிய விருதுகளை தட்டித்தூக்கியது தண்ணீர் தண்ணீர். தீபாவளீ ரேஸில் இந்த படம் எவ்வளவு வசூல் செய்தது என்பதை விட, எத்தனை விருதுகளை பெற்றது என்று கேட்பது தான் பொருத்தமாக இருக்கும். 


இந்த நான்கு படங்களுமே வெளியாகி நான்கு விதமான வரவேற்பை பெற்றது என்பது தான் உண்மை.