நானும் விஜய்யும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ள அவர், இன்னும் இரண்டு படங்களுக்குப் பின் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் அறிவிப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருக்கும் நிலையில் விஜய்யின் அரசியல் வருகை பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


அதில், “எனக்கு விஜய்க்கும் அண்ணன் - தம்பி என்ற உறவை தவிர ஒரு தொடர்பும் இல்லை. ஒரே மண்ணின் பிள்ளைகள். அதில் இனம் புரியாத பாசம் உள்ளது. தொலை தூரத்தில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் அக்கறையில் செய்திகளை பரிமாறிக் கொள்வோம். இந்த படத்தோடு நிறுத்தணும்ன்னு சொன்னாரு. நான் அதெல்லாம் வேண்டாம், இன்னொரு படம் நடிங்கன்னு சொல்லி அனுப்புனேன். இவ்வளவு இடைவெளி தேவை இல்லை என கூறினேன். எதுவொன்றை இழக்க தயாராக இல்லாதவன் பிறிதொன்றை அடைய முடியாது. தன்னை தாழ்த்தி கொள்ள தகுதியில்லாதவன் தலைவனாகும் தகுதியை அடைய மாட்டான். இது பேரறிஞர்கள் சொன்னது தான். எதையாவது இழக்க வேண்டும் அல்லவா!


ஒரு தலைவனாக வருபவன் தூக்கம் தொலைக்க வேண்டும், அவமானங்களை தாங்க வேண்டும், பசியை மறக்கவும், துறக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். விஜய் படத்தில் நடிப்பதை விட்டு வருகிறார் என்றால் விட்டு தானே வர வேண்டும். நான் என் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்திற்கான புரட்சி என நான் நினைக்கிறேன். இந்த அமைப்புக்குள் இருந்து எதையும் சரி செய்ய முடியாது. என் முன்னோர்கள் எனக்கு காட்டிய வழியில் கற்றுக் கொண்ட பாடத்தை வைத்து இதை மாற்ற வேண்டும். இதை மாற்றாமல் எதுவும் செய்ய வேண்டும். 


நானும் விஜய்யும் இணைந்து செயல்பட வேண்டும் என்றால் எங்கள் கோட்பாட்டை ஏற்று யார் வந்தாலும் இணைந்து பயணிப்போம். ஆனால் அது இப்போதைக்கு சாத்தியமில்லை. விஜய் கட்சி தொடங்கி அவரின் கோட்பாடுகளும், என் கட்சி கோட்பாடுகளுக்கும் இடையே பெரிய முரண்பாடு இல்லை என்றால் இணைந்து செயல்படுவது பற்றி விஜய் தான் முடிவு செய்ய வேண்டும். காரணம் விஜய் இனிதான் களத்திற்கு வரப்போகிறார். நான் அவர் வரும்போது 15 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பேன். இந்த கேள்வியை விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். என்னை பொறுத்தவரை இணைந்து பயணிப்பதை காலம் தான் முடிவு செய்யும்” என சீமான் தெரிவித்துள்ளார்.