வட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று பீகார் ஆகும். பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தார்.
பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு:
இந்த நிலையில், கடந்த 28ம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து 9வது முறையாக முதலமைச்சர் பதவியேற்றார். மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நிதிஷ்குமாரின் நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பீகாரில் இன்று நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நிதிஷ்குமார் அரசு தங்களுக்கு 128 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சியை பிடிப்பதற்கு அங்கு 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்கும் அரசியல் கட்சிகள்:
பா.ஜ.க.வின் 78 உறுப்பினர்களும், நிதிஷ்குமாரின் ஜனதா தளம் 45 உறுப்பினர்களும், ஜிதன்ராம் மாஞ்சிஸ் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா 4 எம்.எல்.ஏ.க்களும், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வும் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி 114 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் வசம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடக்க உள்ள நிலையில், பீகாரில் அந்தந்த கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் தங்க வைத்துள்ளனர். பாட்னாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டத்தில் நிதிஷ்குமார் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 45 பேரில் 4 பேர் பங்கேற்கவில்லை. அவர்களை தொடர்பு கொண்டும் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெரும் பரபரப்பு:
அதேபோல, கயாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 78 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் வரவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர்கள் வராததற்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று அந்த மாநில துணை முதலமைச்சர் விஜய் சவுத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரியா ஜனதா தள எம்.எல்.ஏ. சேத்தன் ஆனந்த் காணவில்லை என்று தகவல் வெளியான நிலையில், அவர் தேஜஸ்வி யாதவ் வீட்டில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த வீடியோ வெளியாகி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பீகார் மாநிலத்தில் நடக்கும் இந்த அரசியல் சூழல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: TN Assembly: ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்!
மேலும் படிக்க: காலையிலே மகிழ்ச்சி! இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை - கத்தார் நீதிமன்றம்