சர்தார் திரைப்படம் படம் அல்ல படிப்பினை என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசி இருக்கிறார்.
இது குறித்து சீமான் பேசும் போது, “ இதை படம் என்று சொல்ல முடியாது படிப்பினை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக்கருத்தை வலியுறுத்தி நான் முன்னமே பேசியிருக்கிறேன். தண்ணீர் மிகப்பெரிய வியாபார பொருளாக மாற்றப்பட்டுள்ளது. உலக உயிர்களின் உடைமை பொருட்களை சந்தைப்படுத்துதலாக மாற்றியது எவ்வளவு பெரிய பேராபத்து என்பது புரிய வருகிறது. இந்தப்படம் அதனை மிகவும் விளக்கமாக சொல்கிறது. இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இரும்புத்திரையிலும் இதே போல ஒரு சமூக பொறுப்புணர்வோடு அதை அணுகி இருந்தார். அவருக்கு ஒரு சமூக பொறுப்பு குறித்த பார்வை இருக்கிறது. கதை, உரையாடல், ஒளிப்பதிவு என எல்லாமே சிறப்பாக வந்திருக்கிறது. இது ஒரு சிறந்த படைப்பு.” என்று பேசியிருக்கிறார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் இரட்டை வேடத்தில் நடித்து தீபாவளி பரிசாக அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான திரைப்படம் “ சர்தார்”. தண்ணீர் பாட்டிலால் வரும் காலத்தில் ஏற்படும் பாதிப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத்திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தில் கார்த்தியுடன் ராஷிகண்ணா, லைலா, ரெஜிஷா விஜயன், முனீஷ்காந்த், அவினாஷ், மாஸ்டர் ரித்விக், யூகி சேது, முரளி சர்மா உள்ளிட்டோர் பலநட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்தப்படத்தின் மூலமாக முதன்முறையாக, தமிழில் வில்லனாக அறிமுகமானார் சங்கி பாண்டே. இந்தப்படத்திற்கு போட்ட்டியாக சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியானது. வெளியான அன்றைய தினம் பிரின்ஸ் படத்தின் வசூல் நன்றாக இருந்தாலும், அதன் பின்னரான நாட்களில் வந்த எதிர்மறையான விமர்சனங்களால் அந்தப்படத்தின் மீதான ஆர்வம் மக்களிடம் குறைந்தது. ஆனால் சர்தார் வெளியான அன்றைய தினம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், அடுத்தடுத்த நாட்களில் வந்த பாசிட்டிவான விமர்சனங்கள் அந்தப்படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்ததோடு படத்தின் வசூலும் அதிகரித்தது. இந்த நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் இந்தப்படத்தின் இராண்டாம் பாகம் வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய கார்த்தி , “ சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியை தந்திருக்கிறது. இந்தப்படத்தின் இராண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று பலர் சமூகவலைதளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆகவே சர்தார் படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறோம்.” என்று பேசியுள்ளார். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கார்த்தி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற கைதி படத்தின் இராண்டாம் பாகம் அடுத்த வருடம் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.