அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழிக்கான பாராளுமன்றக் குழுவின் பரிந்துரைகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தி மொழி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


தமிழ்நாடு அரசு இந்தித் திணிப்புக்கு எதிராகத் தனித் தீர்மானமே நிறைவேற்றி இருக்கிறது. மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. உள் துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழி குழு சமீபத்தில் பரிந்துரை ஒன்றை அளித்து இருந்தது. அதில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழி பயிற்று மொழியாகக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தை விருப்ப மொழியாக மட்டுமே வைத்து இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பு தேர்வுகளிலும் இந்தி மொழி அவசியமாக்கப்பட வேண்டும் என்றும் அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


மேலும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் பேசும் மக்களின் நலனுக்கு எதிராக அமித்ஷா குழு பரிந்துரைத்ததை எதிர்த்து இந்த தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  சட்டப்பேரவையில் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்நிலையில், கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில், தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்த தமிழ்க் கூட்டமைப்பு இந்தித் திணிப்புக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சுப.வீர பாண்டியன், விஜி.சந்தோசம் உட்பட  30-க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து:


"தமிழ் மொழிக்கு கடும்  நெருக்கடி நேர்ந்து உள்ளது இது ஒன்றும் புதிதல்ல. சுமார் 85 ஆண்டுகளாக இந்தியை தமிழின் மீது திணிக்க மத்திய அரசு போராடி வருகிறது . பல வருடங்களாக போராடி முடியாத சூழலில் இன்று சட்டத்தின் மூலம் தமிழ் மீது இந்தியை திணிக்க எண்ணுகிறார்கள். இந்தியாவில் அலுவல் மொழியாக ஹிந்தி, கல்வி நிலையங்களில் பயிற்சி மொழியாக இந்தி, அலுவலகங்களில் ஹிந்தி என அனைத்து இடங்களிலுமே ஹிந்தியை நுழைத்து வருகிறார்கள். ஹிந்தி மொழி தெரியாதவர்கள் மத்திய அரசின் பணிகளில் சேர முடியாத நிலைமையை மெல்ல மெல்ல கொண்டுவருகின்றனர்.


இந்தியாவின் உள்ளே இருந்தாலும் ஹிந்தி எங்களுக்கு வேற்று மொழி என கூறினார். மேலும் முகலாய மொழியில் சமஸ்கிருதம் கலந்து பிறந்ததுதான் இந்தி அதற்கு வரலாறுதான் சான்று என தெரிவித்தார். தமிழ் மொழிக்காக இருமொழிக் கொள்கையை இன்றைய முதல் மட்டுமல்ல  அண்ணாவும் கலைஞரும் பின்பற்றி வந்தனர். இரு மொழிக் கொள்கையை எங்கள் ஒரே கொள்கை என தெரிவித்தார்.


இந்திய பிரதமர் ஐநாவிற்கு சென்றால் மன்கீ பாத சென்றால் தமிழை மேற்கோள் காட்டுகிறார் மேலும் திருக்குறள் பாரதியின் பாடல்களை மேற்கோள் காட்டுகிறார் இந்த விதத்தில் பிரதமரை மதிக்கிறோம். தமிழும் சமஸ்கிருதமும் சிவனின் உடுக்கையில் இருந்து பிறந்தது என்ற புராண கதைகள் வரலாற்றில் உண்டு, அப்படி இருக்க சமஸ்கிருதத்திற்கு செய்கின்ற அதே அளவு செலவு தமிழுக்கு ஏன் செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினார். 5 கோடி தமிழர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் படிக்க கற்றுக்கொடுங்கள். தமிழில் உரையாடல் செய்யுங்கள்" என வேண்டுகோள் விடுத்தார்