மலையாளப்படங்களில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய மொழிகளில் நடித்து வருபவர் நிகிலா விமல். இவர் 2016ம் ஆண்டு வெற்றிவேல் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் கிடாரி போன்ற படங்களில் நடித்தார். கேரளாவை பூர்விகமானக் கொண்ட நிகிலாவின் மலையாளப்படம் ஒன்று தற்போது வெளியாகவுள்ளது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நிகிலா நேர்காணல் அளித்தார். அவரிடம் மாட்டுக்கறி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதாவது மாட்டை இறைச்சிக்காக வெட்டுவது சரியா?தவறா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நம்ம ஊரில் பசுவை வெட்டலாமா வெட்டக்கூடாதா என்ற விதிமுறை எல்லாம் இல்லை. பசுவை வெட்டக்கூடாது என்பது இப்போதுதான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
விலங்குகளை பாதுகாக்க வேண்டுமென்றால் அனைத்து விலங்கையும்தான் பாதுகாக்க வேண்டும். எந்த விலங்கையும்தான் கொல்லக்கூடாது. வெட்டக்கூடாது என்றால் எதையுமே வெட்டக்கூடாது. கோழி மீனை சாப்பிடலாம்.கோழி ஓர் உயிர் இல்லையா? அதற்கு ஒரு நியாயமா? மாற வேண்டுமென்றால் முழு சைவமாக மாற வேண்டும். இல்லையென்றால் பசுவுக்கு சலுகையெல்லாம் கூடாது. சாப்பிடலாம் என்றால் அனைத்தும் சாப்பிடலாம். இல்லை என்றால் எதுவுமே சாப்பிடக் கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளார்
மாட்டுக்கறி தொடர்பான பிரச்னைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடங்க இருந்த ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு நடத்தும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணியை அனுமதிக்காவிட்டால், விழா நடைபெறும் வளாகத்தின் முன் பீப் பிரியாணியை இலவசமாக வழங்குவோம் என விசிக, எஸ்டிபிஐ, மமக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருந்தது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஏபிபி நாடு இணைய செய்தி நிறுவனத்திடம் பேசிய விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு, ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டதற்கு பின்னணியில் சங்பரிவார் அமைப்புகளின் சதி இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே கனமழை காரணமாக பிரியாணி திருவிழா தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.