மலையாள திரையுலக முன்னணி நடிகர் குஞ்சாக்கோ போபன் மற்றும் நடிகை காயத்ரி சங்கர் நடிப்பில் 'நான் தான் கேஸ் கொடு' என்ற மலையாள திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்தை ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் இயக்குநரான ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் போஸ்டர் கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. படம் வெளியாகும் முன்பே, இந்த படம் சர்ச்சைகளை சந்தித்தது. இதற்கு காரணம் அந்த ஒரு போஸ்டர் தான். சமீபத்தில் வெளியிடப்பட்ட அந்த போஸ்டரில் தியேட்டருக்கு வரும் வழியில் பள்ளங்கள் இருக்கும், எப்படியாவது வந்து படத்தை பாருங்கள் என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த வாசகம் கேரள அரசை விமர்சிப்பது போல் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
படத்தின் போஸ்டர் வெளியானதில் இருந்து பட குழுவினர் பல எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த போஸ்டர் குறித்தான சர்ச்சைக்கு படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். இந்த கருத்தை கேரளா அரசுக்கு களங்கம் இழைக்கும் வகையில் பார்க்கும் இணையவாசிகள்,படக்குழுவினர் அளிக்கும் விளக்கத்தை கேட்பதாக இல்லை. அவர்கள் சமூக வலைதளங்களில் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள். மேலும் ஒரு பெண் தன் சமூக வலைதள பக்கத்தில் படக்குழுவினர் அரசிடம் மன்னிப்பு கேட்டால் தான், இந்த படத்தை போய் பார்ப்பேன் என்று தெரிவித்துள்ளார்..
குஞ்சாக்கோ போபன் விளக்கம்:
சமூக வலைதளங்களில் நடிகர் குஞ்சாக்கோ போபன் இந்த போஸ்டருக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுவதாவது, இந்த போஸ்டர் கேரளா அரசை விமர்சிக்கும் போஸ்டரோ, கேரளா அரசை தவறாக காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட போஸ்டரோ அல்ல! இந்த போஸ்டரை பார்க்கும்போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது. அதுவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சாலைகள் கேரள சாலைகள் அல்ல… இந்த படத்தில் வரும் தமிழ்நாட்டில் உள்ள சாலைகள். அதைத்தான் போஸ்டரில் குறிப்பிட்டோம் என்று விளக்கம் அளித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன் கருத்து :
இந்த சர்ச்சையின் நடுவே கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன் இதற்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டதாவது, இந்த போஸ்டரை விமர்சிப்பவர்கள் அனைவரும் இதை ஒரு கலைப் படைப்பின் கருத்து சுதந்திரமாக பார்க்க வேண்டும். கலைப்படைப்பில் உள்ள கருத்து சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் ஏன் இதை விமர்சிக்க வேண்டும். இதனாலேயே இந்த படத்தை நிறைய மக்கள் பார்ப்பார்கள் என்று கூறினார். மேலும் கடந்த வாரம் கேரள நெடும்பச்சேரி பகுதியில் ஹசீம் என்ற 52 வயது நபர் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது சாலையில் உள்ள குழியில் விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து கேரள உயர்நீதிமன்றம் சென்ற திங்கட்கிழமை தேசிய நெடுஞ்சாலையிடம் சாலைகளில் உள்ள அனைத்து குழிகளையும் அடைக்குமாறு உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்