தமிழ் ரசிகர்களை கவர்ந்த நிவின் பாலி


மலையாள நடிகரான நிவின் பாலி, கேரளாவில் சிறிய வேடங்களில் நடிக்க ஆரம்பித்து மெல்ல மெல்ல வளர்ந்து வந்த நிலையில், நேரம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற பிஸ்தா பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடிக்க, படமும் நிவின் பாலிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் அவர் சிறிய இடத்தை பிடித்தார். குறிப்பாக, அவருக்கு இளம் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இதைத் தொடர்ந்து, அவர் துல்கர் சல்மான் மற்றும் ஃபகத் பாசிலுடன் இணைந்து நடித்த மலையாள படமான Bangalore Days, தமிழிலும் வெளியாகி ஹிட்டானது. அதோடு, அவருக்கு கூடுதலான ரசிகர்களையும் பெற்றுத் தந்தது.


நிவினை உள்ளம் கவர் நாயகனாக மாற்றிய 'பிரேமம்'


தமிழில் ஓரளவு ரசிகர்களை பெற்றிருந்த நிவின் பாலிக்கு பிரேமம் படம் ஒட்டுமொத்த ரசிகர்களின் அன்பையும் பெற்றுத் தந்தது. படத்தின் நாயகியான மலர் டீச்சர் ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட, அந்த சிம்மாசனத்தில் நாயகன் நிவின் பாலியும் அமர்ந்துகொண்டார். இதன் மூலம் தமிழில் இளம் ரசிகைகளின் உள்ளம் கவர் நாயகனாகவும் அவர் மாறினார்.


மீண்டும் கோகுலம் பட நிறுவனத்துடன் இணைவு


மலையாளத்தில் பல படங்கள் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்த நிவின் பாலிக்கு, பிரமாண்ட படத்தை கொடுத்தது ஸ்ரீ கோகுலம் பட தயாரிப்பு நிறுவனம். 2018-ல் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான காயங்குளம் கொச்சுண்ணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதில், நாயகன் காயங்குளம் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடித்த நிலையில், முக்கிய வேடத்தில் மோகன்லாலும் நடித்திருந்தார். இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு, தற்போது மீண்டும் கோகுலம் பட நிறுவனத்துடன் இணைவதாக, தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்துடன் தகவலை பதிவிட்டிருக்கிறார் நிவின் பாலி. இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.