அண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கும் '2018 'படத்திற்குப் பிறகு அப்படத்தின் இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார்.


ஓம் சாந்தி ஓஷானா:


2014ஆம் ஆண்டு நிவின் பாலி - நஸ்ரியா நடிப்பில் வெளியாகி மலையாளம் தாண்டி ரசிகர்களை ஈர்த்து ஹிட் அடித்தத் திரைப்படம் ‘ஓம் சாந்தி ஓஷானா’.


இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜூட் ஆண்டனி ஜோசஃப் தொடர்ந்து நடிப்பு, இயக்கம் இரண்டிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். பிரேமம், ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ என நடிகர் நிவின் பாலியுடன் தொடர்ந்து நடித்து வந்த ஜூட் ஆண்டனி ஜோசஃப், மற்றொருபுறம் ஒரு முத்தாஸி கதா, சாராஸ் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார்.


மாஸ் ஹிட் 2018:


இந்நிலையில் சென்ற வாரம் ஜூட் ஆண்டனி இயக்கத்தில் ‘2018’ எனும் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  இந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் நடிகர் நிவின்பாலி கதையின் நாயகனாக நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தத் திரைப்படம் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்பின் கனவு படைப்பாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் அவருடைய முதல் படத்திற்கு பிறகு மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்திருப்பது எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கிறது. மேலும் இருவரும் இணைந்த 'ஓம் சாந்தி ஓஷானா' படத்தின் வெற்றியை, இப்படம் மீண்டும் சாத்தியப்படுத்தும் எனவும் மலையாளத் திரையுலகினர் காத்துள்ளனர்.


கேரள வெள்ளம்:


மற்றொருபுறம் ஜூட் ஆண்டனி ஜோசஃபின் 2018 திரைப்படம் பெரும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. 2018ஆம் ஆண்டு கேரள வெள்ளத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்  படத்தில் டோவினோ தாமஸ் மையக் கதாபாத்திரமாக நடித்துள்ளார்.


கடந்த 90 ஆண்டுகளில் இந்த மாதிரியான ஒரு வெள்ளத்தை கேரள மாநிலம்  எதிர்கொண்டது இல்லை எனக் கூறப்படும் நிலையில், அந்த வெள்ளத்தில் கிட்டதட்ட 450 பேர் உயிரிழந்தார்கள் எனவும் 15 நபர்கள் காணாமல் போயினர் என்றும் தகவல்கள் வெளியாகின.


கேரள மாநிலம்  பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நிலையில் ஒட்டுமொத்த கேரள மக்களும் ஒற்றுமையாக செயல்பட்டு மீண்டு வந்தனர். மேலும் உலகம் முழுவதுமிருந்து அவர்களுக்கு உதவிகள் குவிந்தன.


அண்மையில் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் திரையிடப்பட்ட நிலையில், இந்தப் படத்தை பார்வையிட்ட ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். மேலும், இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி  என்றும் பலர் இந்தப் படத்தை சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.