நடிகை நித்யா மேனன்(Nithya Menen), தமிழ் நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறியதாகத் தகவல்கள் பரவி வரும் நிலையில், நித்யா மேனன் இதற்கு விளக்கமளித்துள்ளார்.


வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி


கேரளாவை பூர்விகமாகக் கொண்டு மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னட சினிமாக்களில் நடித்து பிரபல தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன்.


 




தமிழில் குறிப்பாக ஓகே கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் என சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தன் பப்ளி தோற்றத்தால் ரசிகர்களை ஈர்த்த நித்யா மேனன், மிகவும் கவனமுடன் தன் அடுத்தடுத்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.


நித்யா மேனன் விளக்கம்


இந்நிலையில் நித்யா மேனனிடம் தமிழ் நடிகர் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாகவும், அது குறித்து தன் சமீபத்திய நேர்க்காணலில் நித்யா வருத்தம் தெரிவித்ததாகவும் இன்று காலை முதல் இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன.


மேலும் “தெலுங்கு சினிமாவில் இதுபோன்ற எந்த சில்கல்களையும் நான் எதிர்கொள்ளவில்லை, ஆனால் தமிழ் நடிகர் ஒருவர் படப்பிடிப்பின்போது எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்” என நித்யா கூறியதாக அதிர்ச்சித் தகவல் பரவியது.


இந்நிலையில் இணையத்தில் பரவி வந்த இந்தத் தகவல் வதந்தி என்றும், தான் அவ்வாறு சொல்லவில்லை என்றும் நித்யா மேனன் தற்போது விளக்கமளித்துள்ளார்.


‘இண்டர்வியூவே தரல.. வதந்தி பரப்பாதீங்க’


“இது போன்ற வதந்திகளைப் பரப்பாதீர்கள். இந்த வதந்தியைப் பரப்பியவர்கள் யார் என்பதை எனக்கு சுட்டிக்காட்டுங்கள். நான் இண்டர்வியூவே தரவில்லை. வியூஸ்களுக்காக இது போன்ற தவறான செய்திகளை பரப்புபவர்களை இதற்கு பொறுப்பேற்க வேண்டும்” என்றும் நித்யா மேனன் காட்டமாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






நித்யா மேனனின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.


தனுஷூடன் இரண்டாவது படம்


நித்யா மேனன் திருச்சிற்றம்பலம் படத்துக்குப் பிறகு மீண்டும் நடிகர் தனுஷ் உடன் டி50 படத்தில் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தினை நடிகர் தனுஷே இயக்குகிறார்.


முன்னதாக கொலாம்பி எனும் மலையாள  திரைப்படமும், வொண்டர் வுமன் எனும் ஆங்கிலப் படமும் நித்யா மேனன் நடிப்பில் வெளியாகின.


அடுத்தடுத்த படங்கள்


மேலும் இந்தியில் ‘மர்டர் மிஸ்டரி’ எனும் படத்தில் நடிகர் விவேக் ஓபராய் உடன் நித்யா இணைந்து நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக நடிகர் அக்‌ஷய் குமாரின் மிஷன் மங்கள் எனும் திரைப்படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக இந்தியில் நித்யா அறிமுகமாகி இருந்தார். 2019ஆம் ஆண்டு இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில், தற்போது ஹீரோயினாக இந்தியில் தன் முதல் படத்தில் நித்யா மேனன் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.