ரன்பீர் கபூர் - அலியா பட் நவம்பர் 6ஆம் தேதி பெண் குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, இருவரது ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்து அவர்களை திக்குமுக்காட வைத்து வருகின்றனர்.
பாலிவுட்டின் ஆதர்ச ஜோடிகளில் ஒருவரான ரன்பீர் கபூர் - அலியா பட் ஜோடி கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து ஜூன் மாதம் தான் கருவுற்றிருப்பதை அறிவித்த அலியா முன்னதாக படு சுறுசுறுப்பாக பிரம்மாஸ்திரா, டார்லிங்ஸ் பட ப்ரோமோஷன் பணிகளில் பங்குபெற்று வந்தார்.
கடந்த மாதம் அலியாவுக்கு வளைகாப்பு விழா அவரது மும்பை இல்லத்தில் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் சூழ நடந்து முடிந்தது. அந்தப் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ஹிட் அடித்தன. நேற்று முன் தினம் (நவம்பர் 6ஆம் தேதி) காலை அலியா பட் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைப் பேறுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன. அதனைத் தொடர்ந்து அன்று மதியமே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான அழகிய பதிவு ஒன்றை அலியா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
ஆண், பெண், குழந்தை என மூன்று சிங்கங்கள் உள்ள படத்துடன், “எங்கள் வாழ்க்கையின் சிறந்த செய்தி இதுதான். எங்கள் குழந்தை வந்துவிட்டாள்.... என்ன ஒரு மாயக்கார பெண்! நாங்கள் அதிகாரப்பூர்வமாக அன்பில் திளைக்கிறோம். இப்படிக்கு ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அன்பான பெற்றோர் அலியா - ரன்பீர்” எனப் பதிவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பலரும் இருவருக்கும் வாழ்த்து மழையைப் பொழிந்து வரும் நிலையில், அமுல் நிறுவனம் தன் பங்குக்கு க்யூட்டான ‘டூடுல்’ வெளியிட்டு இந்த இளம் பெற்றோரை வாழ்த்தியுள்ளது.
“பெண் குழந்தையை வரவேற்கும் ஸ்டார் தம்பதி” எனும் தம்பதியுடன் இந்த டூடுலை அமுல் நிறுவனம் பகிர்ந்துள்ளது. அமுலின் இந்த டூடுல் அலியா - ரன்பீர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது.