தஞ்சை மாவட்டம் வேங்கராயன் குடிக்காட்டில் உள்ள வில்லாயி அம்மன் கோயிலில் இன்று ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி உலக நன்மை வேண்டி திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


தஞ்சாவூர் மாவட்டம் வேங்கராயன் குடிக்காட்டில் அமைந்துள்ளது வில்லாயி அம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் உலக நன்மைக்காக ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


காசவள நாடு நமச்சிவாய அருள்நெறி சபை மற்றும் தஞ்சாவூர் அப்பர் தமிழ் மன்றம் ஆகியவை இணைந்து வில்லாயி அம்மன் சன்னதியில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினர். விநாயகர் வணக்கத்துடன் ஏழு திருமுறைகளும் பாடப்பட்டது. நேற்று காலையில் தொடங்கிய திருவாசக முற்றோதல் தொடர்ந்து இடைவிடாமல் 5 மணி நேரத்துக்கு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அப்பர் தமிழ் மன்ற நிறுவனர் ஆசிரியை புவனசுந்தர லட்சுமி, முனைவர் திருநாவுக்கரசர், காச வளநாடு நமச்சிவாய அருள்நெறி சபை நிர்வாகிகள் தர்மராஜ், கோவிந்தராஜ், செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


ஏற்பாடுகளை வேங்கராயன் குடிகாடு கிராம மக்கள் செய்திருந்தனர். இதையடுத்து வில்லாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.  நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி கிரிவலம் நடந்தது. சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டு குழு டிரஸ்ட் சார்பில் பவுர்ணமி கிரிவலம் ல்லப கணபதி சன்னதியில் இருந்து துவங்கியது. திண்டுக்கல் துரைசாமி தலைமை வகித்தார். சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் துணை ஆணையர் உமாதேவி, சுவாமிமலை காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு மற்றும் கிரிவலமும் நடைபெற்றது.


சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் நிர்வாகி கேசவராஜன், மேனேஜிங் டிரஸ்டி சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், டிரஸ்டிகள் மாணிக்கம், சண்முகம், நெடுஞ்செழியன் மற்றும் பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


இதேபோல் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் பிளாஞ்சேரியில் உள்ள காமாட்சி கைலாசநாதர் கோயிலில் சரபசூலினி அம்பாளுக்கு ஜெயமங்களா யாகம் உள்ளது. இக்கோயிலில் தனி சன்னதி கொண்டு அஷ்ட பைரவர்கள் சூழ சரபசூலினி அம்மன் அருள்பாலிக்கிறார்.


பவுர்ணமியையொட்டி இக்கோயிலில் ஜெயமங்களா யாகம் நடந்தது. கோயில் பரம்பரை அறங்காவலர் நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பூஜைகளை செய்தனர். மகா தீபாராதனையை தொடர்ந்து சரப சூலினி சன்னதிக்கு எடுத்துவரப்பட்ட புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது.


பின்னர் தீபாராதனை நடைபெற்றது. யாகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் கண்ணன் குருக்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.