ஒரு கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறையில் அன்றைய தினம் அதிகபட்சமாக மூன்று பேர் மட்டுமே வகுப்பிற்கு வந்திருப்பார்கள். அதை வைத்தே சொல்லிவிடலாம் அன்று வெள்ளிக்கிழமையென்று. புதிய திரைப்படங்கள் ரிலீஸ்; மாணவர்கள் எல்லாரும் தியேட்டருக்கு சென்றிருப்பார்கள். அப்படி, வெள்ளிக்கிழமை என்றால் புதிய தமிழ் சினிமா வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். சினிமா பிரியர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை (16.06.2023) வெளியாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
ஆதிபுருஷ்
ஆதிபுருஷ் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ராமராக பிரபாஸ், சீதையாக க்ரித்தி சனோன், இராவணனாக சைஃப் அலி கான், ஹனுமனாக தேவதத்தா நாக் ஆகியோர் நடித்துள்னர்.
ஓம் ராவத் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், பிரபல மராத்திய இசையமைப்பாளர்களான அஜய் - அதுல் ஜோடி இசையமைத்துள்ளனர்.
இப்படத்தின் ஃஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதலே இப்படம் கடும் ட்ரோல்களை சம்பாதித்து வருகிறது. பிரபாஸ் ராமரைப் போல் தோற்றமளிக்கவில்லை என்றும், ராவணன் கதாபாத்திரத்துக்கும் சைஃப் அலி கானுக்கும் சம்பந்தமில்லை என்றும் ட்ரோல்கள் குவிந்த நிலையில், விமர்சனங்களைக் கடந்து, படக்குழுவினர் 100 கோடிகளை படத்துக்கு ஒதுக்கி தங்கள் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாகிறது. இதற்கு புரோமோசன் பணிகளும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், படம் வெளியாகும் முன்பே உலகம் முழுவதும் ஆதிபுருஷ் படத்தின் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபாஸின் சொந்த ஊரான ஹைதராபாத்தில் டிக்கெட் புக்கிங் இன்னும் தொடங்காத நிலையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
700 கோடிகள் வரையிலான பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் திரையரங்குகளில் வசூலைக் குவித்தால் மட்டுமே வெற்றியடையும் எனும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் வெற்றியடையுமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பொம்மை:
தமிழில் அபியும், நானும், மொழி, பயணம், காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கி இருக்கும் திரைப்படம் பொம்மை. யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி ஷங்கர், கதாநாயகனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
முன்னதாக மான்ஸ்டர் படத்தில் எஸ்ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர் ஜோடி இணைந்து நடித்துள்ள நிலையில், தற்போது பொம்பை படத்தில் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். மான்ஸ்டர் படத்தில் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி சிறப்பாக பேசப்பட்டது.
மாநாடு, டான் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் பொம்மை. இதற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
எறும்பு
முன்னணி குணச்சித்திர நடிகர்களாக சார்பி, எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் சக்தி ரித்விக், மோனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘எறும்பு’. இதை சுரேஷ் குணசேகரன் இயக்கியுள்ளார். கிராமிய பின்னணியில் எளிய மக்களின் வாழ்வியலை முன்னிறுத்தி உருவாகியிருக்கும் இப்பட்டத்தை மண்ட்ரூ ஜி.வி.எஸ். ட்புரொடெக்சன் தயாரித்துள்ளது. இது ஒரு புதுவித அனுபவத்தை தரும் படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்திருந்ததனர்.
இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) திரையரங்குகளில் வெளியாகிறது.
Pixar's Elemental
உலக புகழ்பெற்ற அனிமேசன் திரைப்ப்பட தாயாரிப்பு நிறுவனமான டிஸ்னி பிக்ஸார் தயாரிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் ‘எலமென்டல்’ ( Elemental). வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் மற்றும் பிக்ஸாக் அனிமேசன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
Finding Neme, Brave, The Incredibles, Incridebeles2, Ratatouile, Wall-E, Up, Toy Story 3 ஆகியா மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கிய பீட்டர் சோன் (Peter Sohn) இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
Element என்ற நகரில் வசிப்பவர்களை பற்றிய கதை இது. நீர்,நெருப்பு, வானம், காற்று, மண், மேகங்கள் உள்ளிட்டவைகள் வசிக்கும் ஒரு நகரம். இங்கு வசிக்கும் நீர், மற்றும் நெருப்பு இருவருக்குமிடையே காதல் மலர்கிறது. ரொமாண்டிக் காமெடி படமாக இது இருக்கும். அதோடு, புலம்பெயர்தல் தொடர்பான விசயங்களை பேசும் முதல் டிஸ்னி படம் என்று சொல்லப்படுகிறது. மிகவும் அழகாக கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் இது வரும் வெள்ளிக்கிழமை (ஜூன்,16) வெளியாகிறது. இந்தியாவில் 23-ம் தேதி வெளியாகிறது.