நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள குண்டூர் காரம் படம் தமிழ் டப்பிங்கில் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள நிலையில் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
இயக்குநர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் - நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த படம் "குண்டூர் காரம்”. இந்த படத்தில் ஸ்ரீ லீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ஆந்திராவில் வசூலை அள்ளியது. இந்தியாவில் மட்டும் ரூ. 123 கோடிகளை பாக்ஸ் ஆஃபிஸில் அள்ளியது குண்டூர் காரம் படம்.
இதனிடையே குண்டூர் காரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று வெளியானது. தெலுங்கில் மட்டுமே இப்படம் பொங்கலுக்கு ரிலீஸான நிலையில் ஓடிடி தளத்திற்காக தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. ஒரு தாய்க்கும், மகனுக்குமான உறவை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. இதில் மகேஷ் பாபுவின் தாயாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். அதேபோல் அப்பாவாக ஜெயராமும், தாத்தாவாக பிரகாஷ்ராஜூம் நடித்திருந்தனர். இதனால் இன்று ஓடிடி தளத்தில் ஆவலுடன் படம் பார்க்க சென்ற காத்திருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
குண்டூர் காரம் படத்தில் நடிகை பூர்ணா ஆடிய குத்துப்பாட்டு ஒன்று இடம் பெற்றிருந்தது. அதனால் மொழி தாண்டி இப்பாடல் அனைவரையும் கவர்ந்ததிருந்தது. இதனிடையே இந்த பாடலை தமிழில் மொழிமாற்றம் செய்கிறேன் என்ற பெயரில், “அவளுக்கு பொன்னி அரிசியாம்..எனக்கு மட்டமான சன்ன அரிசியாம்.. அவளுக்கு தங்க தோடுதான்... எனக்கு கட்டம் போட்ட காட்டன் சேலையாம்... தங்கத்தோடு அவ காதுல தக தகன்னு மின்னிப்போக.. என்கிட்ட இருக்கும் சேலை மட்டும் சுருங்கி போய் கிழிஞ்சி போச்சு.. கொஞ்சம் மடக்கி தட்டு” என எழுதப்பட்டுள்ள வரிகள் கடுமையான கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
இதேபோல் சர்கார் வாரி பட்டா படத்தில் மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் உடனான டூயட் பாடலுக்கான வரிகள் அடங்கிய பழைய வீடியோவும் ட்ரெண்டாகி உள்ளது.
“நான் கொண்டு வாரன் குண்டு மல்லி திங்களுக்கு
நான் வந்து தாரேன் செந்தூரப்பூ செவ்வாயிக்கு
ஹே புத்தம் புது பூவை தரேன் புதனுக்கு
ஹே முத்தம் அதில் தச்சு தாரேன் வியாழனுக்கு
அட ரோஜா பூவை கொண்டு வாடா வெள்ளிக்கிழமை
அட பூஜை செய்யும் சம்பங்கி தான் சனிக்கிழமை
என் அங்கம் எங்கும் பூக்கும் பூக்கள் தங்கமாக மாறும் பூக்கள் , ஞாயிறெல்லாம் உனக்காகவே...!” என எழுதப்பட்டுள்ளது.
இதையெல்லாம் பார்க்கும்போது “டப்பிங்கிற்கு உண்டான மரியாதை போச்சே உங்களால” என சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
ALSO READ | Lal Salaam Review: ரஜினிகாந்தின் மாஸ் கேமியோ! ஐஸ்வர்யா இயக்கம் எப்படி? “லால் சலாம்” திரைப்பட விமர்சனம்!