Lal Salaam Review: மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் லால் சலாம். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகக்கோப்பை நாயகன் கபில் தேவ் நடிக்கின்றார்கள் என்றபோது படத்தின் மீது எதிர்பார்ப்பு கிளம்பியது.


கிரிக்கெட் வீரர்களாக இருந்து சினிமாவுக்கு வந்து முத்திரை பதித்துக்கொண்டு இருக்கும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர் என்றபோது படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு நகரும் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் கதையில் அதைத் தாண்டி தேவையாக கருத்துக்கள் பேசி ரசிகர்களின் கைத்தட்டல்களை பரிசாகப் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 


படத்தின் கதை


1993ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகின்றது கதை. முரார்பாத் என்ற கிராமத்தில் ஒற்றுமையோடும் மதநல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வரும் இந்து - முஸ்லீம் மக்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டினால் ஏற்படும் சின்ன மனஸ்தாபத்தை, அங்குள்ள அரசியல்வாதி தனக்கு சாதகமாக மாற்ற, இரு பிரிவினருக்கும் இடையில் மதக் கலவரத்தை தூண்டுகின்றார்.


இதனால் ஒற்றுமையாக இருந்த இரு பிரிவினருக்கும் இடையில் பெரும் வன்முறை ஏற்படுகின்றது. இந்த சண்டையில்  ரஞ்சி டிராபிக்கு தகுதிபெற்ற ரஜினியின் மகனாக வரும் விக்ராந்த் பாதிக்கப்படுகிறார். விஷ்ணு விஷால் காதலிக்கும் பெண் அரசியல்வாதிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்படுகின்றது. இதனால் ஏற்பட்ட கோபத்தால் ஊர் திருவிழாவுக்கு தேர் கொடுத்து வந்த அரசியல்வாதி தேரை தர மறுக்கிறார். கோயிலுக்கு புதிய தேர் வாங்க விஷ்ணு விஷாலும் அவரது கிரிக்கெட் அணி வீரர்களும் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுகிறதா இல்லையா, விஷ்ணு விஷாலை ரஜினியின் ஆட்கள் என்ன செய்தனர் என்பது மீதிக் கதை. 


படம் எப்படி இருக்கு?


தொடக்கம் முதல் க்ளைமேக்ஸ் வரை படம் வலியுறுத்தும் ஒரு மையக் கருத்து மதநல்லிணக்கம். மொய்தீன் பாயாக வரும் சூப்பர் ஸ்டார் தனது சிறப்பான நடிப்பினால் ரசிகர்களை கட்டிப் போடுகின்றார். மொய்தீன் பாய் கதாப்பாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டது மட்டும் இல்லாமல், தனது ரசிகர்களுக்கும் குட்டி ட்ரீட் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.


கிராமத்துக் கோயில் பூசாரியாக வரும் செந்தில், ஊர் தலைவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள தம்பி ராமையா ஆகியோர் நம்மை கிராமத்திற்கே அழைத்துச் செல்கின்றனர். இருவருக்கும் கொடுக்கப்படுள்ள வசனங்கள் தியேட்டரில் கைத்தட்டலை அள்ளுகின்றன. விஷ்ணு விஷாலின் காதலியாக வரும் அனந்திகா சனில்குமார் தான் வரும் சில காட்சிகளிலேயே மனம் கவர்கின்றார். விவேக் பிரன்னா, தங்கதுரை ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாப்பாத்திரத்திற்கு பொருந்திப் போகின்றனர். படம் முழுக்க வரும் விஷ்ணு விஷாலின் நடிப்பு நிறைவைத் தருகின்றது. 


படம் முழுக்கவே மதநல்லிணக்கத்திற்கு இடையூறாக உள்ள சில விஷயங்களை நேரடியாகவே காட்சிப்படுத்தி, இடையூறுகளைக் களைந்து எப்படி மதநல்லிணக்கத்தோடு இருப்பது என அழமாக சொல்லியுள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.


லால் சலாம் திரைப்படத்தின் மூலம் தான் சொல்ல நினைத்ததை சிந்தாமல் சிதறாமல் சொல்லி, கைதேர்ந்த இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். படத்தின் கதை மற்றும் திரைக்கதைக்கு ஏற்ற இசையை கச்சிதமாக கொடுத்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.


இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் குடும்பத்தோடு மட்டும் இல்லாமல் சமூகமே கொண்டாட வேண்டிய திரைப்படம்.  படத்தின் கதையை திரைக்கதையாக மாற்றும்போது அதில் பிரச்சார நெடி எதுவும் இல்லாமல், சிறப்பாக காட்சிப் படுத்தி, ரசிகர்களை திருப்திப்படுத்திய படக்குழுவுக்கு பாராட்டுக்கள்!