திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவால் நேற்று (ஜூலை.15) காலமான நிலையில், அவர் நடித்த பல காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு ட்ரெண்டாகி வருகின்றன.
பிரதாப் போத்தனுக்கு நேரிலும் சமூக வலைதளங்களிலும் திரைப் பிரபலங்கள், சினிமா ரசிகர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்...
இந்நிலையில், பிரதாப் போத்தன் ’நன்றி மீண்டும் வருக’ எனும் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் திரையைப் பகிர்ந்து கொண்ட காட்சி தற்போது இணையத்தில் பகிரப்பட்டு ட்ரெண்ட் ஆகி உள்ளது.
தன் தத்துவார்த்தமான பதிவுகளுக்காக பிரதாப் போத்தன் ஏற்கெனவே பிரபலமான நிலையில், ரஜினியுடன் இடம்பெற்றுள்ள இந்தக் காட்சியும் தத்துவார்த்தமாக அமைந்துள்ளது.
இந்தக் காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வாஞ்சையாக ’ரஜினி’ என பிரதாப் போத்தன் அழைப்பதோடு, அவரைத் தூக்கவும் செய்கிறார். இந்நிலையில் இணையத்தில் இந்தக் காட்சி ஹிட் அடித்துள்ளது.
வெற்றிகரமான இயக்குநர்
தமிழில் 1979ஆம் ஆண்டு ’அழியாத கோலங்கள்’ படத்தில் அறிமுகமான பிரதாப் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் 10க்கும் மேற்பட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கியும் உள்ளார். ’மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தில் இயக்குநராக அறிமுகமான பிரதாப் போத்தன் இப்படத்துக்காக தேசிய விருது வென்றுள்ளார்.
தமிழில் பிரதாப் போத்தன் இயக்கிய மிகப்பெரும் ஹிட் படங்களில் ஒன்று ’சீவலப்பேரி பாண்டி’. 1994ஆம் ஆண்டு நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான இந்தப் படம் நெப்போலியனின் திரை வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனை படமாக அமைந்தது.
அதேபோல் நடிகர் கமல்ஹாசனின் மாபெரும் வெற்றிப் படங்களுள் ஒன்றான வெற்றி விழா படத்தையும் பிரதாப் போத்தன் இயக்கியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்