ஓணம்  பண்டிகையை முன்னிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா தம்பதியினர் தங்கள் இரட்டை குழந்தைகள் புகைப்படத்தை பதிவிட்ட நிலையில், இணையவாசிகள் தெரிவித்த கமெண்டுகள் அதிர்ச்சியையும், அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


கேரள மாநிலத்தின் பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் பண்டிகை கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படுகிறது. ஹஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் இந்த திருவிழா கொண்டாடப்படும். அந்த வகையில் நடப்பாண்டுக்கான ஓணம் பண்டிகை கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கியது. இதனை முன்னிட்டு  வீடுகள் மற்றும் கோயில்களில் அத்தப்பூ கோலமிட்டு மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 


நாளை திருவோண பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பிரபலங்களும் தங்கள் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா தம்பதியினர் தங்கள் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டனர். அதில் தங்கள் இரட்டைக் குழந்தைகளான உயிர் ருத்ரோநீல் -  உலக் தெய்வீக் ஆகியோர் முகத்தை காட்டாமல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.


குழந்தைகளுடன் தங்கள் முதல் ஓணம் பண்டிகை என்பதால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். மேலும் மக்கள் அனைவருக்கும் தங்கள் ஓணம் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இப்படியான நிலையில், இந்த புகைப்படங்களை கண்ட இணையவாசிகள் சகட்டுமேனிக்கு அதில் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ”குழந்தைக்கு என வேகமாக வளரும் மருந்து கொடுத்துள்ளீர்களா? மிஷின்ல எதுவும் போட்டு வளர்க்கிறீர்களா?, ரத்தமாரே பாட்டா போடுங்கடா, அடுத்து குழந்தைகளின் 12 ஆம் வகுப்பு ரிசல்ட் போட்டோ வருமா?” என பதிவிட்டுள்ளனர்.






பெரும்பாலான கமெண்டுகள் குழந்தை 11 மாத காலத்தில் எப்படி இவ்வளவு பெரிதாக வளர்ந்தது என்பதாகவே உள்ளது. இணையவாசிகளின் இத்தகைய கமெண்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரசிகர்களும் சமூக நல்லெண்ணம் கொண்டவர்களும், தனிப்பட்ட முறையில் தாக்கி பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.


கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் தங்களுக்கு வாடகை தாய் மூலம் அக்டோபர் 10 ஆம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர். அவ்வப்போது தங்கள் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வரும் நிலையில் இன்னும் ஒரு மாத காலத்தில் உயிர் ருத்ரோநீல் -  உலக் தெய்வக்  இருவரும் தங்களின் முதல் பிறந்தநாளை கொண்டாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.