நடிகர் வடிவேலு தேர்தல் பிரசாரத்தில் தன்னை விமர்சித்ததற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ரியாக்‌ஷன் என்னவாக இருந்தது என பிரேமலதா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக இடம் பெற்றது. கடைசி வரை இழுபறிக்கு சென்ற கூட்டணி கடைசியில் அதிமுக வசமானது. இந்த சமயத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக திமுக சார்பில் நடிகர் வடிவேலு களமிறக்கப்பட்டார். அவர் பிரசாரம் செய்த இடமெல்லாம் விஜயகாந்தை தாறுமாறாக பேச பொதுமக்களே அதிர்ச்சியடைந்தனர். அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. 


ஆனால் எதிர்க்கூட்டணியில் இருந்து பிரச்சாரம் செய்ததற்காக வடிவேலுவுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போனது. கிட்டதட்ட 7 ஆண்டுகள் காலம் அவர் இல்லாமல் தான் தமிழ் சினிமாவே இருந்தது. ஆரம்ப காலக்கட்டத்தில் வடிவேலு விஜயகாந்தின் படங்களிலும் நடித்தார். பின்னாளிலும் இருவரும் சேர்ந்த படங்களின் காமெடி மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இப்படியான நிலையில் வடிவேலு விஜயகாந்தை அப்படி விமர்சித்திருக்க கூடாது என பலரும் இன்றளவும் வருத்தப்படுவார்கள். 


இப்படியான நிலையில்,  நேர்காணல் ஒன்றில் நடிகர் வடிவேலு விஜயகாந்தை சந்தித்தார் என்றும், தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டார் என்றும் தகவல்கள் வெளியானதே..அது உண்மையா? என பிரேமலதாவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, பதிலளித்த அவர், ‘இது தவறான செய்தி. அப்படி எதுவும் நடக்கவில்லை. யார் என்றாலும் எது வேண்டுமானாலும் பேசட்டும். இதுவரை விஜயகாந்த் தன்னை திட்டியவர்கள், துரோகம் செய்தவர்கள், ஏமாற்றியவர்கள் பற்றி பேசிருப்பாரா சொல்லுங்க. அதுதான் தலைவன். விஜயகாந்தை யாருடனும் ஒப்பிட முடியாது. மீம்ஸ் போட்டு கூட அவரை காயப்படுத்துனீங்க. ஆனால் இதுவரை எந்த வருத்தத்தை கூட விஜயகாந்த் எங்களிடம் பகிர்ந்து கொண்டது இல்லை. 


உங்களுக்கு தெரியாத விஷயம் ஒன்று சொல்கிறேன். அவ்வளவு தூரம் வடிவேலு திட்டுனாரு என சொல்கிறீர்களே.. நான் பக்கத்துல இருக்கும்போது விஜயகாந்த் சொன்னார். ‘ஏன் இப்ப வடிவேலு நடிக்க மாட்டேங்குறாரு, அவரெல்லாம் பிறவி கலைஞன். நடிக்க வேண்டும் என சப்போர்ட் தான் பண்ணாரு. எல்லா தயாரிப்பாளரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். விஜயகாந்தும் தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்களிடம் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டார்.


அவரெல்லாம் தமிழ் சினிமா இழக்க கூடாது என சொன்னார். இப்படி ஒருத்தரை பார்த்து இருக்கிறீர்களா? .. எங்கேயாவது வடிவேலுவை பற்றியோ, துரோகம் செய்த எம்.எல்.ஏ,க்களை பற்றியோ எங்கேயாவது பேசினாரா? . அதுதான் விஜயகாந்த். அவரின் அந்த குணங்கள் தான் மக்களிடம் அவரை கொண்டாட வைக்கிறது.