சமூகநீதி படமாக, ஜாதி மறுப்பு படமாக, அனைவரும் சமம் என்கிற படமாக கொண்டாடப்பட்டு வரும் ‛நெஞ்சுக்கு நீதி’ படத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக வரும் குமரன் கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகர்கள் மறுத்துவிட்டதாகவும், அதில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த அவரது பேரன் அருள்நிதியும் ஒருவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. 


நெஞ்சுக்கு நீதி திரைப்படம் தொடர்பாக சிறப்பு காட்சி வெளியிடப்பட்ட நிலையில், படத்தில் குமரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த ‛பிக்பாஸ்’ புகழ் ஆரி அர்ஜூன், படத்தை பார்த்த பின், வெளியே வந்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் ஒரு முக்கிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதில், தான் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் நடிக்க பலரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும், அதை ஏற்க மறுத்த நடிகர்களில் உதயநிதியின் சகோதரரான அருள்நிதி மறுத்த அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்துள்ளார். இதோ அவரது பேட்டி: 




‛‛என்னோட கதாபாத்திரம், இந்தியில் மிக சிறிதாக இருந்தது. ஆனால் தமிழில் எனது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக வைக்கப்பட்டிருந்தது. படம் முடிந்த பின், நான் இல்லை என்றால், எனது கதாபாத்திரத்தில் யார் நடித்திருப்பார்கள் என்று இயக்குனரிடம் கேட்டேன். இயக்குனராக, அருண்காமராஜ் சாருக்கு நிறைய ஆப்ஷன் இருந்துள்ளது. ஆனால், எனது பங்களிப்பை பார்த்து அவர் திருப்தி அடைந்திருந்தார். குமரனை நிஜத்தில் பார்த்த மாதிரி இருந்தது என்று பாராட்டினார். 


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, நிறைய பட வாய்ப்புகள் வந்தது. நிறைய படங்கள் செய்ய வேண்டும் என்பதை விட நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து தான், இந்த படத்தில் நடித்தேன். ‛ஏன் ஹீரோவா நடிக்காமல், இந்த படத்தில் நடிக்கிறீர்கள்’ என்று பலரும் கேள்வி கேட்டனர். ‛இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்றால், வேறு யார் நடிக்க முடியும்’ என்று எனக்குள் நானே கேட்டுக்கொண்டு தான், இந்த படத்தில் நடித்தேன்.  சமூகநீதியை பேசுகிறோம், சமூகத்திற்கு பணியாற்றுகிறோம், நான் இதை பேசாமல், வேறு யார் பேச முடியும் என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது. படத்தை பார்த்து விட்டு பலரும் பாராட்டினார்கள். சமூக நீதியை சரிசமமாக சொல்லும் படம் இது. ஒன்றை உயர்த்தி, ஒன்றை தாழ்த்தி காட்ட நினைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல. 


நிறைய பேர் இந்த கதையை கேட்டு , வேறொருவரை வைத்து இந்த படத்தை பண்ணுங்க என நிராகரித்தவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். குறிப்பாக ரஞ்சித் சார், கார்த்திக் தங்கவேல், அதர்வா, அருள்நிதி சார் ஆகியோருக்கு நன்றி. அவர்கள் ஒருவேளை நடித்திருந்தால், எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது,’’ என்று அந்த பேட்டியில் ஆரி தெரிவித்தார்.


இதோ அந்த பேட்டியை வீடியோவில் காணலாம்...



 


உதயநிதி நடித்த படத்தில் அவரது சகோதரர் நடிக்க மறுத்த விசயம், ஆரி அளித்த பேட்டி மூலம் அம்பலமாகியிருக்கிறது. என்ன காரணத்திற்காக அவர்கள் நடிக்க மறுத்தார்கள் என்பது ஒருபுறமிருக்க, சமூகநீதி பேசும் படம் என அதற்கான விளம்பரத்தை தேடும் இந்த நேரத்தில், அதை காரணம் காட்டி தான் சில நடிகர்கள் நடிக்க மறுத்தார்களோ என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை!